நாடாளுமன்றத்தில் தனது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் எழுந்து சென்ற ராஜீவ் காந்தியை, "மிஸ்டர். ராஜீவ் காந்தி ஆன்சர் டூ மை கொஸ்டீன்?" என்று நிறுத்தி கேள்வி கேட்டு திணறடித்த வைகோ எங்கே?
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது:–
தற்போது நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. முல்லை பெரியாறு அணையை உயர்த்த கேரள அரசு சதி செய்கிறது. இதை தடுப்பதற்காக மதிமுக முன்னின்று போராட்டங்களை நடத்தி வருகிறது.
எனவே மதிமுகவை, குறிப்பாக என்னை தேர்தலில் தோற்கடிக்க கேரளா சதி செய்கிறது. இதற்காக கோடிக்கணக்கில் பணம் கேரளாவிலிருந்து வந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கெல்லாம் மக்கள் மயங்க மாட்டார்கள். இந்த தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும். மத்தியில் நரேந்திர மோடி பிரதமராவார். இவ்வாறு வைகோ பேசியுள்ளார்.
வைகோ தமிழக மக்களின் உரிமைப் பிரச்சனைகளில் முன்னின்று போராடக் கூடியவர்தான். ஈழத்தமிழர் பிரச்சனையிலும் ஆரம்பத்திலிருந்து ஒரே நிலைப்பாட்டில் இருப்பவர்தான். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் முதலாளித்துவத்திற்கு அடிபணியாமல் உறுதியோடு போராடியவர்தான்.
ஆனால் மக்களவை தேர்தல் நெருங்கிய பிறகு, அவருடைய பேச்சுகள் நிலைப்பாடுகள் அனைத்தும் அவரது பழைய செயல்பாடுகளையும், நெறிகளையும் கேள்விக்குள்ளாக்குவதாக அமைந்துள்ளன என்பதை மக்கள் உணர்ந்தே வருகிறார்கள் என்பதை வைகோ, மதிமுக தொண்டர்களும் உணர வேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு, ராஜபக்சவும், மு.க.ஸ்டாலினும் தேர்தலில் என்னைத் தோற்கடிக்க சதி செய்கிறார்கள் என்றார். இது என்ன கூட்டு என்பது யாருக்கும் விளங்கவில்லை. இலங்கையில் உள்ள ராஜபக்ச யாரை வைத்து இவரைத் தோற்கடிக்க சதி செய்கிறார். இன்றைய சூழலில் இலங்கை அரசுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கும் கட்சி என்று சொன்னால் அது காங்கிரஸ்தான். இந்த தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ள சூழலில் ராஜபக்சவோ அல்லது காங்கிரசோ வைகோவை என்ன செய்துவிட முடியும். இன்னும் சொல்லப்போனால் இன்று தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டதற்கான காரணமே ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழன துரோகமும், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாடும்தான்.
மு.க.ஸ்டாலின் பெரும்பாலும் தன்னுடைய பிரச்சாரங்களில், வைகோவைப் பற்றி பேசுவதே இல்லை. சேதுசமுத்திர திட்டத்தைப் பற்றி பேசும்போது மட்டும்தான் தற்போது வைகோவின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வியை வைக்கிறார்.
மாறாக கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் தென் மாவட்டத்தில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். ஆனால் வைகோ வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று ஒரு பிரதான கட்சியின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளர் வேலை செய்தார். வைகோ தோற்றும் போனார். இப்போது அவரோடுதான் உற்ற தோழனாக, உயிருக்குயிரான நண்பராகிவிட்டார் வைகோ.
ஈழத்தமிழர் பிரச்சனையில் வாஜ்பாய் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாரோ அதே நிலைப்பாட்டை மோடியும் கடைபிடிக்க வேண்டும் என்று வைகோ திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கிறார். வாஜ்பாய் தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்தாரா என்ன? அல்லது ஈழப்பிரச்சனையில் இலங்கையின் மீதான வெளியுறவுக் கொள்கையை மாற்றிக் கொண்டாரா?
ஒன்றும் கிடையாது.
விடுதலைப்புலிகள் ஓயாத அலைகள் 3 போரின் இறுதிகட்டத்தில் ஆனையிறவு பகுதியை கைப்பற்றி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை வீரர்களை உயிருடன் கைது செய்து வைத்திருந்தபோது, உடனடியாக இலங்கை வீரர்களை விடுவிக்கவில்லையென்றால் இந்திய இராணுவக் கப்பல்கள் அவ்வீரர்களை மீட்கும் என்று எச்சரித்தவர் வாஜ்பாய். இது வைகோவுக்கு தெரியாதா?
இப்போதும் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் நலன் குறித்தோ, தமிழக மீனவர்கள் நலன் குறித்தோ, காவிரிப் பிரச்சனையைப் பற்றியோ, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பற்றியோ, தமிழகத்தில் உள்ள மின் பற்றாக்குறை பற்றியோ ஒரு வார்த்தை கூட இல்லையே? (தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பாஜக பிரதமர் வேட்பாளர் இந்தக் கேள்விகளுக்கெல்லம் ஒரு அற்புதமான விளக்கத்தை அளித்தார். அதாவது, 'தேர்தல் அறிக்கையில் பேப்பரில் இடம் இல்லை' என்பதுதான் அது) உரிமை பிரச்சனைகளில் ஓங்கிக் குரல் கொடுக்கும் வைகோவிடம் இதற்கெல்லாம் என்ன பதில் இருக்கிறது?
ஈழத்தமிழர் விவகாரத்தை எடுத்துக் கொண்டால், காங்கிரஸ் திமுக எம்.பி.க்கள் ராஜபக்சவிடம் கைகுலுக்கி பரிசில் பெற்று வந்ததை விண்ணதிரப் பேசும் வைகோ, சுஸ்மா சுவராஜ் கைகுலுக்கியதற்கு வாஜ்பாய் நிலைப்பாடு என்று பெயர் சூட்டுவாரா?
ராஜபக்சவுக்கு டெல்லியில் காங்கிரஸ் அரசு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது போல்தானே, மத்திய பிரதேச சிவ்ராஜ் சிங் சவுகான் அரசும் வரவேற்பு கொடுத்தது. அதைக் கண்டித்து ம.பி.யில் வைகோவும், நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்களும் நடுசாலையில் போராட்டம் நடத்தினார்கள். இப்போது வைகோ பாஜகவை ஆதரித்துவிட்டுப் போகட்டும். ஆனால் பாஜக ஆதரவுக்கு ஈழத்தமிழர் விவகாரத்தை பயன்படுத்திக் கொள்வதைப் பார்க்கும்போது ஒருவேளை வைகோவே வாஜ்பாய் நிலைப்பாட்டை எடுத்துவிட்டாரோ என்று அஞ்சத் தோன்றுகிறது.
அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உறுதியாகப் போராடிய வைகோ, ஸ்டெர்லைட் முதலாளிகளுக்கு விலைபோகாத வைகோ, விமானத்தில் அருகே வந்து அமர்ந்து பேரம் பேசிய போதும் பணியாத வைகோ, விவசாயிகள் வயிற்றில் அடித்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் திறந்து விட்டுவிட்டு அதை வளர்ச்சியென்று தம்பட்டம் அடித்துக் கொள்பவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவதை எப்படி பார்ப்பது? ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றால், குஜராத்தில் நடந்ததற்கு பெயர் என்ன? ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணம் ராஜபக்ச என்றால், குஜராத் படுகொலைகளுக்கு காரணம் யார்? வைகோ வாய் திறப்பாரா?
இப்போது புது புரளியை கிளப்பி விடுகிறார். கேரள அரசு வைகோவை தோற்கடிக்க சதி செய்கிறதாம். இவரை தோற்கடிக்க கோடிக்கணக்கில் பணம் புரளுகிறதாம். இதை அவரின் கடைசித் தொண்டனாவது நம்புவானா? என்பதை வைகோதான் நிதானமாக எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த முறை வைகோ தோற்றுவிட்டார். அது யார் செய்த சதி? ராஜபக்சவா? ஸ்டாலினா? கேரளாவா?. கடந்த முறை வைகோ தோற்றுவிட்டதால் முல்லை பெரியாறு அணை விவகாரம் கேரளாவுக்கு சாதகமாகிவிட்டதா? முல்லை பெரியாறு அணைக்காக மாபெரும் போராட்டங்கள் கடந்த முறைதான் நடந்தது. அதற்காக வைகோவும் உழைத்தார். மதிமுகவின் பங்கு கணிசமானது. ஆனால் பிரச்சாரத்தில் கேரளா சதி செய்கிறது. ஸ்டாலின் சதி செய்கிறார். ராஜபக்ச சதி செய்கிறார் என்று ஆதாரமில்லாமல் அவிழ்த்து விடுவதை அரைவேக்காடு அரசியலாகதான் மக்கள் அவதானிப்பார்கள்.
நாடாளுமன்றத்தில் தனது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் எழுந்து சென்ற ராஜீவ் காந்தியை, "மிஸ்டர். ராஜீவ் காந்தி ஆன்சர் டூ மை கொஸ்டீன்?" என்று நிறுத்தி கேள்வி கேட்டு திணறடித்த வைகோ எங்கே?