வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 18 ஆகஸ்ட் 2015 (15:47 IST)

சிகரெட் பற்ற வைக்காதீர்கள்; குடிசைகளை!?.. - நியாயமா ராமதாஸ்?

சுதந்திர தினத்தில் ஒரு அராஜகம்:
 
கடந்த 15ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திரம் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்ட அதே வேளையில், இன்னொரு வெட்கக்கேடானதும், துயரமானதுமான ஒரு கொடூர சம்பவம் தமிழகத்தில் நிகழ்ந்தேறியது.
 
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் பகுதி மக்களின் மாரியம்மன் கோவில் சாமி ஊர்வலமும், தேரோட்டமும், பொதுப்பாதை வழியாக செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரவு, 7:00 மணி அளவில் தலித் பகுதி மக்கள் குடியிருப்புகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன.
 

 
மேலும், பெட்ரோல் குண்டுகள் மூலம் சாமி தேரும், குடியிருப்புகளும் கொளுத்தப்பட்டுள்ளன. பல வீடுகள், தெருவிளக்குகள், குடிநீர்குழாய்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.
 
அதே நாளில்தான், பாமகவின் இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணி இராமதாஸ் பங்கேற்ற பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில்  நடைபெற்றது. சேஷசமுத்திரம் கிராமத்திலிருந்து பொதுக்கூட்டத்திற்கு வந்து சென்றவர்கள்தான் தலித் மக்களின் கோவில் தேர் மீது பெட்ரோல் குண்டுகள் எறிந்து எரித்துள்ளனர்.
 
திட்டமிட்ட தாக்குதல்:
 
தலித் மக்களின் குடிசைகளை முற்றிலும் எரித்து நாசமாக்கியுள்ளார்கள். தடுக்க வந்த காவலர்களையும் கற்களை வீசி கொடூரமாக தாக்கியுள்ளனர். இருசக்கர வாகனங்கள் மற்றும் வைக்கோல் போர்களையும் முற்றிலும் எரித்துள்ளனர்.
 
தேர்திருவிழா நடைபெறுவதாக இருந்த ஒருவார காலத்திற்கு முன்புதான் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் அனைத்து தரப்பினரும், 16ஆம் தேதி தேர்த்திருவிழா நடத்திக்கொள்ள ஏற்றுக் கொண்டுள்ளனர்.
 

 
ஆனால், 15ஆம்தேதி நடைபெற்ற அன்புமணி இராமதாசின் பொதுக் கூட்டத்திற்கு பிறகுதான் காட்டு மிராண்டித்தனமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. தலித் மக்கள் வசிக்கும் பகுதியின் மின் இணைப்பை துண்டித்தது மற்றும் பெட்ரோல் குண்டுகளை தயார் நிலையில் வைத்திருந்தது ஆகியவற்றை பார்க்கும் பொழுது, இத்தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பது தெளிவாக்குகிறது.

நியாயமா ராமதாஸ்?:
 
இது ஒருபுறம் இருக்க, கோவில் தேர் மற்றும் குடிசைகள் எரிப்பையும், காவலர்களின் மீதான தாக்குதல்களையும் பாமக தலைவர் இராமதாஸ் அவர்கள் நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருப்பது என்ன வகையான அரசியல் நிலைப்பாடு?.
 
இன்றைய தேதிக்கு தமிழக அரசியல் நிலைமையில், முக்கிய பிரதான எதிர்கட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள விஜயகாந்தின் தேமுதிக-வை விட பாமகதான் முக்கிய எதிர்கட்சியாக திகழ்கிறார்கள் என்ற மனநிலைக்கு பொதுமக்களே கிட்டதட்ட வந்துவிட்டனர். அந்த அளவிற்கு நீங்கள் விட்ட அறிக்கைகள் ஏராளம்.. ஏராளம்...
 

 
மதுஒழிப்பு, ராஜிவ் குற்றவாளிகள் தூக்கு, யாகூப் மேமன் தூக்கு, ரயில்கள் தனியார் மயம் ஆக்குதல், கிராணைட் ஊழல், சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்கள், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு, என்.எல்.சி. ஊழியர்கள் வேலைநிறுத்தம், அரசு பள்ளிகள் மூடல், அரசு கேபிள் நிறுவன ஊழல் என கடந்த சில தினக்கள் முன்பு பாறை எரிவளி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அறிக்கைகள் என நீண்டுகொண்டே போகும்.
 
இது தவிர அன்புமணி ராமதாஸ் அவர்கள் வேறு தனது பங்கிற்கு அறிக்கை மேல் அறிக்கை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டது தொடர்பாக நீங்கள் விடுத்துள்ள அறிக்கையின் செய்தி என்ன ராமதாஸ்?
 
எதனை காட்டுகிறது உங்கள் அறிக்கை?:
 
”வன்முறைக் கட்சியை சேர்ந்த சிலர் இன்று தேரோட்டம் நடத்தியே தீருவோம் என சுவரொட்டிகளை ஒட்டி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதன்விளைவாக நேற்றிரவு 2 சமூகத்தினருக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
 
எல்லாவற்றிற்கும் வெளிப்படையான அறிக்கைவிடும் நீங்கள் ஏதோ மூன்றாம் தரமாக வன்முறைக் கட்சி என்று பொதுப்படையாக கூறியுள்ளீர்கள். வெளிப்ப்டையாகவே நீங்கள் அறிவிக்கலாமே?
 
அடுத்து, ”மோதலை கட்டுப்படுத்துவதற்கு வரவழைக்கப்பட்ட காவல்துறையினர், மோதலுக்கு யார் காரணம் என்பதை விசாரிக்காமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மீது கண்மூடித்தனமாக தடியடி மற்றும் தாக்குதல் நடத்தியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
 
பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களின் சார்பாக நின்று பேசுவதை விட்டுவிட்டு, கலவரத்திற்கு காரணமானவர்கள் பக்கம் நின்று பேசுவது உங்களின் ஒரு தரப்பு சார்புத்தன்மை தவிர வேறெதனை காட்டுகிறது?

குடிசை எரிப்பு நியாயமானதா?:
 
அவர்களில் ஒருவரை தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள் வழியாக இழுத்து வந்தததை மனித உரிமை மீறல்கள் என்று குறிப்பிடும் நீங்கள், குடிசைகள் கொழுத்தப்பட்டது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசாதது எவ்வளவு மோசமான, அபத்தமான உங்களின் சாதி சார்பை அல்லவா காட்டுகிறது? இது சமூக உரிமை மீறல்கள் அல்லவா?.
 
அப்பாவி மக்கள், அதுவும் மாவட்ட ஆட்சியர் பேசி சுமூகமாக பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தி, அனைவரும் சமாதானம் அடைந்த பின்னரும் வன்முறையை கையில் எடுத்து, தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை நியாயப்படுத்துகிறீர்களா ராமதாஸ்?
 

 
இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்களை தடுக்க காவல் துறையினரும் வருவாய் அலுவர்களும் ஈடுபட்ட போது அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு, உடனடியாக ரூ.5000 ஆயிரம் வழக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட பொதுமக்கள் இழந்த குடிசைகளுக்கும், பொருட்களுக்கும் என்ன இழப்பீடு வழங்கப்போகிறார்? இதுவரையிலும் ஒரு வார்த்தைகூட முதல்வர் ஏன் வாய் திறக்கவில்லை?
 
குடிசைகளை பற்றவையுங்கள்:
 
ராமதாஸ் அவர்கள் ரஜினிகாந்த் நடித்த ’பாபா’ திரைப்படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றதை கண்டித்தும் அறிக்கை விட்டதோடு அந்த திரைப்படம் ஓடிய திரையரங்குகள் முன்பு பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சமீபத்தில், தனுஷ் நடித்த ‘மாரி’ திரைப்படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் அதிகம் இடம்பெற்றதை கண்டித்தும் அறிக்கை விடுத்த அன்புமணி ராமதாஸ், ஏன் குடிசைகள் எரிக்கப்பட்டதற்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை?..
 
அப்படியென்றால், சிகரெட் பற்ற வைக்காதீர்கள்; குடிசைகளை பற்றவையுங்கள் என்கிறீர்களா?