செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (21:18 IST)

அபிநந்தனை கிண்டல் செய்து பாகிஸ்தான் விளம்பரம் - சர்ச்சை வீடியோ

பாகிஸ்தானிடம்  பிணைய கைதியாக சிக்கி திரும்ப வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கிண்டல் செய்வது போன்ற ஒரு கிரிக்கெட் விளம்பரத்தை வெளியிட்டு இந்திய மக்களிடம் கடுப்பை கிளப்பி விட்டிருக்கிறது பாகிஸ்தான்.

புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த சென்ற இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் மாட்டி கொண்டார். இந்திய அரசின் முயற்சியால் மீண்டும் அவர் இந்தியாவிற்கு கொண்டு வந்தனர்.

தற்போது நடந்து வரும் உலக கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 16 அன்று மோத இருக்கின்றன. பொதுவாகவே இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் என்றாலே எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அளவிலேயே இரண்டு தரப்பு ரசிகர்களின் மனநிலையும் இருக்கும். அது மட்டுமல்லாமல் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் மோதி கொண்ட ஒரு உலக கோப்பையில் கூட பாகிஸ்தான் இந்தியாவை வென்றது கிடையாது. இந்நிலையில் நடக்கவிருக்கும் போட்டிக்கு விளம்பரம் வெளியிட்ட பாகிஸ்தான் அபிநந்தனை கிண்டல் செய்திருக்கிறது.

அந்த விளம்பரத்தில் பாகிஸ்தான் அபிநந்தனுக்கு டீ கொடுக்கிறது. அவரிடம் சில கேள்விகள் கேட்கிறது. அவர் சரியாக பதில் சொல்லவில்லை. பிறகு ’டீ எப்படி இருக்கிறது?’ என கேட்கிறார்கள். அபிநந்தன் ‘நன்றாக இருக்கிறது’ என சொல்கிறார். ‘சரி நீ போகலாம்’ என்கிறார்கள். அபிநந்தன் டீ கப்போடு அங்கிருந்து நகர்கிறார். உடனே அவர் சட்டையை பிடிக்கும் அதிகாரிகள் ‘கப்பை கொடுத்து விட்டு போ’ என்கிறார்கள். உடனே Lets Bring the cup home என்ற ஹேஷ்டேக் வருகிறது. அதாவது உலக கோப்பை கப்பை, டீ கப்போடு தொடர்பு படுத்தி இப்படியாக ஒரு விளம்பரத்தை செய்திருக்கிறார்கள்.

இதை பார்த்த இந்திய ரசிகர்கள் பலர் பாகிஸ்தானையும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும் இணையத்தில் வறுத்தெடுத்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இரு தரப்பு ரசிகர்களிடையேயும் மோதல் வலுத்துள்ளது. இது தவிர ஒரு இந்திய ராணுவ வீரரை இவ்வாறு கேவலப்படுத்தியிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. என்றாலும் இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட விளம்பரம் இல்லையென்றும், யாரோ கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் தயாரித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.