1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 31 மார்ச் 2014 (14:47 IST)

யுவராஜ்சிங்கின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது - தோனி

யுவராஜ்சிங்கின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் அவர் சிறந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் என்று தோனி புகழாரம் சூட்டியுள்ளார்.
 
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது.
 
‘குரூப் 2’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2–வது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசையும், 3–வது ஆட்டத்தில் வங்காளதேசத்தையும் தோற்கடித்தது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
 
முதலில் விளையாடிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்தது. யுவராஜ்சிங் 43 பந்தில் 60 ரன்னும் விலாசி தள்ளினார், அதில் 5 பவுண்டரி, 4 சிக்சர் அடக்கம். டோனி 20 பந்தில் 24 ரன்கள் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். 
 
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 16.2 ஓவரில் 86 ரன்னில் மண்ணைக் கவ்வியது. இதனால் இந்தியா 73 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது இந்தியா பெற்ற 4–வது வெற்றியாகும். ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 23 ரன் எடுத்தார். அஸ்வின் 4 விக்கெட்டும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது:–
 
யுவராஜ்சிங்கின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. 20 ஓவர் போட்டியில் அவர் சிறந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தன் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அவர் ஆடினார்.
 
இந்த வெற்றி எனக்கு திருப்தி அளிக்கிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவருமே நல்ல சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த ஆடுகளத்தில் 140 முதல் 145 ரன்னே நல்ல ஸ்கோர் தான். ஆனால் நாங்கள் 160 ரன் இலக்கை நிர்ணயித்தோம். நாங்கள் சிறந்த அணிகளை தான் தோற்கடித்து இருக்கிறோம் என்று டோனி கூறினார்.
 
இந்திய அணி தோல்வி எதையும் சந்திக்காமல் தொடர்ந்து 4–வது வெற்றியை பெற்று அரை இறுதியில் நுழைந்துள்ளது. ‘குரூப் 2’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி மோதும் அரை இறுதி ஆட்டம் வருகிற 4–ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
 
‘குரூப் 1’ பிரிவில் 2–வது இடத்தை பிடிக்கும் அணியுடன் இந்தியா அரை இறுதியில் மோதும்.