1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Veeramani
Last Updated : வியாழன், 8 மே 2014 (14:34 IST)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டெல்லிக்கு பதிலடி கொடுத்தது

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணியை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பதிலடி கொடுத்தது.
8 அணிகள் பங்கேற்றுள்ள 7வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ என்ற இறுதிப்போட்டிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழையும்.
 
இந்த நிலையில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று மாலை நடந்த 28வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மோதின. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த டெல்லி அணி பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய போதிலும், சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழுந்ததால், ஸ்கோரும் மெதுவாகவே நகர்ந்தது. கேப்டன் கெவின் பீட்டர்சன் (6 ரன்) தனக்கு தானே சூனியம் வைத்தாற் போன்று ரன்-அவுட் ஆனதும், சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் அல்-ஹசன் சுழலில் மிரட்டியதும் (4 ஓவரில் 13 ரன் மட்டுமே) டெல்லி அணிக்கு நெருக்கடியை உருவாக்கியது. 14.1 ஓவர்களில் தான் அந்த அணி 100 ரன்களை தொட்டது.

இறுதி கட்டத்தில் டுமினியும், கேதர் ஜாதவும் அதிரடி காட்டி சவாலான ஸ்கோரை எட்ட உதவினர். மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் என்று வர்ணிக்கப்படும் சுனில் நரினின் ஓவர்களில் டுமினி 2 சிக்சர் விளாசி வியப்பூட்டினார். இந்த ஜோடி கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் திரட்டியது.
 
20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. டுமினி 40 ரன்களுடனும் (28 பந்து, 3 சிக்சர்), ஜாதவ் 26 ரன்களுடனும் (15 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் நின்றனர். கொல்கத்தா சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் 4 ஓவர்களில் 38 ரன்களை வாரி வழங்கியிருந்தார். ஐபிஎல் போட்டிகளில் அவர் விட்டுக்கொடுத்த அதிகபட்ச ரன் எண்ணிக்கை இதுதான்.
 
அடுத்து 161 ரன்கள் இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கவுதம் கம்பீரும், ராபின் உத்தப்பாவும் களம் புகுந்தனர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் அணிக்கு வலுவான அஸ்திவாரம் அமைத்து கொடுத்தனர். கம்பீர் 18 ரன்களில் இருந்த போது கொடுத்த மிக எளிதான கேட்ச்சை, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் தவற விட்டார். இதற்கு விலையாக டெல்லி அணி வெற்றியை தாரை வார்க்க வேண்டியதாகி விட்டது.
 
தொடர்ந்து 2வது முறையாக தொடக்க விக்கெட்க்கு 100 ரன்களுக்கு மேல் குவித்த உத்தப்பா-கம்பீர் ஜோடி 106 ரன்களை எட்டிய போது பிரிந்தது. உத்தப்பா 47 ரன்களில் (34 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். மறுமுனையில் அசத்திக் கொண்டிருந்த கேப்டன் கம்பீர் (69 ரன், 56 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) இலக்கை நெருங்கிய சமயத்தில் ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் மனிஷ் பாண்டேவும், காலிசும் இணைந்து வெற்றியை உறுதி செய்தனர்.
 
கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்க்கு 161 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 8வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தாவுக்கு இது 3வது வெற்றியாகும். தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்றிருந்த சோகத்துக்கு இதன் மூலம் முடிவு கட்டியிருக்கிறது. முன்னதாக துபாயில் நடந்த முதற்கட்ட லீக்கில் டெல்லி அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்ட கொல்கத்தா அணி, அதற்கு வட்டியும் முதலுமாக அவர்களது ஊரிலேயே பதிலடி கொடுத்திருக்கிறது.
 
அதே சமயம் 8வது ஆட்டத்தில் ஆடிய டெல்லிக்கு இது 6வது தோல்வியாகும். சொந்த ஊரில் ஆடிய 3 ஆட்டங்களிலும் டெல்லிக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. கம்பீர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.