வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (22:45 IST)

"இந்திய அணியின் கண்ணியத்தை காப்பாற்றுக!": விராட் கோலியை கண்டித்த பிசிசிஐ

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கண்டித்துள்ள பிசிசிஐ, இந்திய கிரிக்கெட் அணியின் கண்ணியத்தை காப்பாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலி  அண்மையில் பெர்த்தில் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு வீரர்கள் அறைக்கு திரும்புகையில், அங்கு நின்று கொண்டிருந்த ஆங்கில பத்திரிகை செய்தியாளரை நோக்கி தகாத வார்த்தைகளால் சரமாரியாக திட்டி தீர்த்தார். தன்னையும், தனது காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா குறித்து செய்தி வெளியிட்ட செய்தியாளர் அவர் தான் என்று நினைத்து திட்டியதாக கூறப்பட்டது. பின்னர் அவர் வேறு செய்தியாளர் என்று தெரிந்ததும் விராட் கோலி வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் விராட் கோலி பொது இடத்தில் செய்தியாளரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட விதம் குறித்து அந்த பத்திரிகை சார்பில் இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) புகார் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
 
சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வீரர் (விராட் கோலி) இந்திய அணியின் கண்ணியத்தை எப்போதும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். இது போன்ற செயல்பாடுகளை எதிர்காலத்தில் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.பெர்த்தில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற இந்த சம்பவத்தை பிசிசிஐ கவனத்தில் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அணி நிர்வாகத்தினருடன் பிசிசிஐ தொடர்பில் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்று அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
 
இதற்கிடையில் ‘விராட் கோலி, செய்தியாளரை தகாத வார்த்தைகளால் திட்டவில்லை’ என்று இந்திய அணி நிர்வாகம் நேற்று மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.