வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 18 பிப்ரவரி 2015 (11:14 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டி: இந்திய வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் டிப்ஸ்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்திதல் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்வது குறித்த சில நுனுக்கங்களை சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.


 
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி அடிலெய்டில் நடந்த தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
 
இந்திய அணி தனது 2ஆவது லீக் ஆட்டத்தில் வருகிற 22 ஆம் தேதி வலுவான அணியான தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுடனான மோதல் குறித்து சச்சின் டெண்டுல்கர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
 
அந்தப் பேட்டியில் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:-
 
பாகிஸ்தான் அணியைவிட தென் ஆப்பிரிக்க அணி மிகவும் வலுவானதாகும். கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்த வேண்டுமானால், இந்தியாவுக்கு வலுவான தொடக்கம் அமைய வேண்டியது அவசியமானதாகும்.
 
ரன் எடுக்க ஓடுகையில் வேகமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டியது முக்கியமானது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஓன்று, இரண்டு ரன்கள் எடுப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனென்றால் தென்னாப்பிரிக்க அணியினர் எப்பொழுதும் வேகமாகச் செயல்படக் கூடியவர்கள். ஃபீல்டிங்கில் வல்லவர்கள். அவர்கள் பந்தை ஃபீல்டிங் செய்து, வேகமாக எறிவார்கள்.
 
அவர்களின் ஃபீல்டிங் வியூகம் பாகிஸ்தான் அணியைவிட சிறப்பானதாக இருக்கும். தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் அபாயகரமான வீரர். அவர் நம்ப முடியாத அளவுக்கு பந்து வீசி வருகிறார். ஸ்டெயின் பந்து வீச்சை எப்படி விளையாடுவது என்பதை முன்கூட்டியே முடிவு செய்து விட முடியாது. அவருக்கு அந்த நாள் மோசமானதாக அமைந்தால் அந்த தருணத்தில் முடிவு செய்யலாம்.
 
ஆனாலும் ஸ்டெயின் பந்து வீச்சுக்கு மதிப்பு கொடுத்தாக வேண்டும். அவரது பந்து வீச்சை கவனமாக எதிர்கொண்டு உங்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
 
ரோகித் சர்மாவுக்கு நான் எந்தவித நெருக்கடியும் கொடுக்க விரும்பவில்லை. அடுத்த ஆட்டத்தில் அவர் சரியான நிலைக்கு வந்துவிடுவார்.
 
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்காவை போன்று இந்தியாவும் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக ஆடியதைவிட இன்னும் நம்மால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும். ஆனால் இதே போன்று பந்து வீச்சு இருக்க வேண்டும்.
 
ஆகமொத்தத்தில் உலக கோப்பையை தக்கவைக்க வேண்டுமென்றால் ஒட்டு மொத்த அணியும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒரு சில வீரர்கள் மட்டும் சிறப்பாக விளையாடினால் போதுமானதாக இருக்காது.
 
காலிறுதியை பற்றி சிந்திக்காமல், இந்த ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.