1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 19 மார்ச் 2015 (20:10 IST)

ஒட்டுமொத்த அணியின் உழைப்பே தொடர் வெற்றிக்கு காரணம்: தோனி பெருமிதம்!

இந்திய அணியின் வெற்றிக்கு ஒட்டுமொத்த அணியின் உழைப்பே காரணம் என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
இந்திய அணி இன்று தனது காலிறுதி போட்டியில் வங்கதேச அணியை எளிதில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்றைய போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் தோனி கூறியதாவது:-
 
“ இது மிகச்சிறப்பான ஆட்டம். நாங்கள் சில நல்ல ஆட்டங்களை வெளிப்படுத்தியுள்ளோம். அதேநேரத்தில் ஒரு மாதங்களுக்கு முன் நாங்கள் இங்கு சற்று திணறினோம். தற்போது ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கு யார் காரணம் என்பதை சுட்டிக்காட்டுவது கடினமான ஒன்று. அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அணியில் உள்ள பல வீரர்கள் இல்லை. ஆனால் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறோம்.

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து உட்பட நாங்களும் உலகக்கோப்பைக்கு முன் தடுமாறினோம். ஆனால், தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறோம். ஒரு பேட்ஸ்மேன் பாஃர்ம் இல்லாமல் இருந்து மீண்டும் பாஃர்முக்கு வருவது போலத்தான் இது அமைந்துள்ளது. கிரிக்கெட்டில் சிறிய விஷயங்களைக் கூட சரியாக செய்யவேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.
 
சோம்யா சர்காருக்கு ஆப்சைடில் அபாரமாக தாவி  கேட்ச் பிடித்தது பற்றி தோனியிடம் கேட்ட போது, எதிர்பாராமல் கிடைத்த கேட்ச் அது என்று சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர், அது ஒரு முக்கியமான கேட்ச் ஆகும். சிறப்பான பார்ட்னர்ஷிப் சென்று கொண்டிருந்தது. அந்த பந்து என்னை விட்டு சற்று விலகி செல்லும் என்று நினைத்து நான் பாய்ந்தேன், பந்து எனது கையில் உட்கார்ந்து கொண்டது. மிகவும் திருப்திகரமான தருணம் அது” என்று தோனி கூறினார்.