திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 2 ஜூன் 2023 (10:05 IST)

பாகிஸ்தான் இல்லாமல் நடக்கப் போகிறதா ஆசியக் கோப்பை?

ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் கடந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து இந்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க இருந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானை விட்டு வேறு நாட்டுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் போட்டிகளை ஸ்ரீலங்காவில் நடத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் நஜம் சேத்தி அதிரடியானக் கருத்து ஒன்றை சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதில் “ பாகிஸ்தானில் நடக்க உள்ள ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியை அனுப்பாமல் இருக்க எந்த காரணமும் இல்லை. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி பங்கேற்காது” எனக் கூறியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் இந்தியா சம்மந்தப்பட்ட போட்டிகள் மற்றும் மேலும் சில போட்டிகளை மட்டும் பொதுவான இடத்தில் நடத்தலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆலோசனை தந்தது. ஆனால் அதற்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்து முழு போட்டிகளையும் ஸ்ரீலங்காவில் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்கிடையில் பாகிஸ்தான் இல்லாமல் கூட ஆசிய கோப்பையை நடத்த பிசிசிஐ முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் ஆசியக் கோப்பை பற்றிய முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.