ஷமியை அணியில் எடுத்தது ஏன்?... மனம் திறந்த கேப்டன் ரோஹித் ஷர்மா!
இந்திய அணியில் உலகக்கோப்பை தொடரில் எதிர்பாராத திருப்பமாக ஷமி இணைந்துள்ளார்.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் முதலில் முகமது ஷமி இல்லை. சொல்லப்போனால் கடந்த ஆண்டு டி 20 உலகக்கோப்பையில் விளையாடியதுதான் அவரின் கடைசி டி 20 சர்வதேச போட்டியாக இருந்தது.
அதன் பின்னர் அவர் இந்திய அணிக்காக டி 20 போட்டிகளில் தேர்வு செய்யப்படவே இல்லை. இந்நிலையில் இப்போது பூம்ராவுக்கு பதில் அவர் தேர்வாகியுள்ள நிலையில் அவரால் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதை முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ராவும் எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் பூம்ராவுக்கு பதில் ஷமியை எடுத்தது குறித்து பேசியுள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா “பும்ரா இல்லாத போதே அவருக்கு பதில் அனுபவம் மிக்க வீரர்தான் வேண்டும் என நினைத்தோம். அதற்கு சரியான நபர் ஷமிதான். அவர் புதிய பந்துகளை சிறப்பாக வீசக்கூடியவர். அதனால் பூம்ராவின் இடத்துக்கு அவர்தான் சரியான மாற்று” எனக் கூறியுள்ளார்.