1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (08:48 IST)

2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் தோல்வி: பேட்டிங் வரிசையில் சொதப்பல் -கேப்டன் தோனி

பிரிஸ்பேனில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டி தோல்விக்கு, பேட்டிங் வரிசையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
 
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 2 ஆவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்திய அணி வசம் இருந்த ஆட்டத்தை, ஆஸ்திரேலிய அணியின் ஜான்சன் தனது அதிரடி ஆட்டம் மூலம் தனது அணிக்கு சொந்தமாக்கினார்.
 
ஜான்சன் எடுத்த 88 ரன்களின் விளைவு, ஆஸ்திரேலிய அணி 505 ரன்கள் என உயர்வான நிலையை அடைந்தது. மேலும் தனது அபாரமான பந்துவீச்சு மூலமும் இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கும் வழிவகுத்தார்.
 
3 ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தது. இதில் தொடக்க ஆட்டக்காரரான தவான் 26 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
வலை பயிற்சியின் போது இந்திய வீரர் தவானுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு மாறாக கோலி களம் இறக்கப்பட்டார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கோலி 1 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். பின் வந்த ரகானேவுன் 10 ரன்களில், ரோகித் சர்மா, தோனி ஆகியோர் மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின் களத்தில் இணைந்த தவான் 81 ரன்கள் அடித்தார். ஒருவேளை, தவான் முன்கூட்டியே களத்தில் விளையாடியிருந்தால் இந்திய அணி கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
 
இதுகுறித்து கேப்டன் தோனி கூறுகையில், வலைப் பயிற்சி மேற்கொண்ட ஆடுகளம் நன்றாக இல்லை எனவும், மேலும் பயிற்சியின்போது தவானை பந்து தாக்கியது எனவும் கூறினார். எனினும் காயத்திற்கான அறிகுறி ஏதும் தவானிடம் இருந்து வரவில்லை. போட்டி தொடங்குவதற்கு முன் வலி இருப்பதால், தன்னால் பேட்டிங் செய்ய முடியவில்லை என்று கூறினார். இதனால், யாரை பேட்டிங் செய்ய அனுப்புவது என வீரர்கள் அறையில் பதற்றமான சூழல் காணப்பட்டது என்றார்.