1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (12:06 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் யார்?: அனுராக் தாக்கூர்

வங்கதேச பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநர் யார் என்பது ஜூன் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
 

 
இன்று கொல்கத்தாவில் பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியாவை அவரது வீட்டில் சந்தித்து பேச்சு நடத்திய செயலர் அனுராக் தாக்கூர் இதனை தெரிவித்தார்.
 
இது குறித்து பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் கூறியதாவது:-
 
இந்திய அணி கொல்கத்தாவுக்கு ஜூன் 5ஆம் தேதி வருகின்றனர். இங்கு அணி வீரர்களுக்கு உடற்தகுதி சோதனை நடைபெறும், பிறகு ஜூன் 7ஆம் தேதி வங்கதேசம் புறப்பட்டுச் செல்கின்றனர்.
 
அணியின் சப்போர்ட் ஸ்டாஃப் மற்றும் அணியின் இயக்குநர் பெயர் ஆகியவை ஜூன் 6ஆம் தேதி அறிவிக்கப்படும்.
 
நான் இங்கு 8வது ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக நடைபெற்றது குறித்து ஜக்மோகன் டால்மியாவை தனிப்பட்ட முறையில் சந்திக்க வந்தேன்” என்றார் அனுராக் தாக்கூர்.
 
கங்குலி அணி இயக்குநராகப் போகிறாரா, அல்லது ஆலோசனைக் குழுவின் தலைவர் பதவி, அல்லது உயர் திறன் மேலாளர், அணியின் இயக்குநர் அல்லது அணியின் தலைமைப் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது பற்றியெல்லாம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று தெரிகிறது.
 
இது குறித்து அனுராக் தாக்கூர் கூறும்போது, “இந்திய கிரிக்கெட்டுக்கு கங்குலியின் பங்களிப்பு மிகப்பெரிது, அவர் ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். காத்திருப்பது நலம், எந்த முடிவெடுத்தாலும் அது இந்திய கிரிக்கெட்டின் நலன் கருதியே எடுக்கப்படும். கங்குலி பற்றி மீடியாக்களில் நிறைய ஊகங்கள் உலா வருகின்றன. எங்களுக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்” என்றார்.