1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (12:30 IST)

’சி.எஸ்.கே. அணி தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கிறது’ - தடையை எதிர்த்து சுப்பிரமணிய சாமி மனு

’சி.எஸ்.கே. அணி தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்க்கிறது’ - தடையை எதிர்த்து சுப்பிரமணிய சாமி மனு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தமிழ்நாட்டு மக்களுக்கே பெருமை சேர்க்கும் அணியாக திகழ்ந்தது என்று சென்னை அணிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த மனுவில் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.


 
 
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ராஜ்குந்த்ரா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
 
இது தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி லோதா தலைமையிலான குழு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் குருநாத் மெய்யப்பன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.
 
இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு 2 ஆண்டு காலம் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
 
இதனையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடையை நீக்க வேண்டும் எனக் கோரி பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், ”ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து தடைவிதிக்கப்பட்ட அணிகளில், நிர்வாகிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒரு சிலருடைய தவறுகளுக்காக ஒட்டுமொத்த அணிக்கும் தடை விதிப்பதை ஏற்க முடியாது. 
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை மக்கள் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்களுக்கே பெருமை சேர்க்கும் அணியாக திகழ்ந்தது. இந்த அணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே சென்னை அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.