1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 3 மார்ச் 2015 (18:27 IST)

அயர்லாந்தை துவம்சம் செய்த தென் ஆப்பிரிக்கா; 210 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது

இன்றைய உலகக் கோப்பை போட்டியில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க 201 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
உலகக் கோப்பை போட்டியின் 24ஆவது லீக் ஆட்டம்  கான்பெர்ராவில் நடந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா - அயர்லாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 

 
அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்திலேயே டி காக் ஒரு ரன்னில் ஏமாற்றினார். பின் இணைந்த டு பிளிஸ்ஸி மற்றும் ஹாசிம் அம்லா சிறப்பாக செயல்பட்டு அயர்லாந்து அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
 
தொடர்ந்து அசத்திய அம்லா சதத்தை கடந்தார். மறுமுனையில் டு பிளஸ்ஸியும் சிறப்பாக செயல்பட்டு சதத்தை எட்டினார். அவர் 109 பந்துகளில் [10 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 109 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார்.
 
தொடந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அம்லா 128 பந்துகளில் [16 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 159 ரன்கள் சேகரித்து ஆட்டமிழந்தார். ஆக்ரோஷமாக செயல்பட்ட கேப்டன் டிவிலியர்ஸ் 9 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 

 
பின்னர் இணைந்த மில்லர், ரோஸ்ஸோவ் இணை அதிரடி காட்ட ஆரம்பித்தனர். இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 411 ரன்கள் எடுத்தது. மில்லர் 23 பந்துகளில் [4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 46 ரன்களுடனும், ரோஸ்ஸவ் 30 பந்துகளில் [6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 61 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 
பின்னர் 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணியின் தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் ஸ்டிர்லிங்க் 9 ரன்களிலும், போட்டர்ஃபீல்ட் 12 ரன்களிலும், ஜாய்சி ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறினர்.
 
அடுத்து களமிறங்கிய நைல் ஓ பிரையன் 14 ரன்களிலும், வில்சன் ரன் ஏதும் வெளியேற அயர்லாந்து அணி 48 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அயர்லாந்து 100 ரன்களைகூட தாண்டாது என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், கெவின் ஓ பிரையன் பால்பிர்னே இணை அணியின் வீழ்ச்சியிலிருந்து தடுத்து நிறுத்தினர்.
 
இந்த இணை 6ஆவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் குவித்தது. இந்நிலையில் பால்பிர்னே 58 ரன்களில் வெளியேறினார். அடுத்து மூனே 8 ரன்களிலும், கெவின் ஓ பிரையன் 48 ரன்களிலும் வெளியேறினர்.
 
கடைசியில் இறங்கிய டாக்ரெல் 25 ரன்களும், சோரன்சன் 22 ரன்களும் எடுத்தனர். இறுதியில், 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் கெய்ல் அப்போட் 4 விக்கெட்டுகளையும், மோர்கல் 3 விக்கெட்டுகளையும், ஸ்டெய்ன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது ஹாசிம் அம்லாவிற்கு வழங்கப்பட்டது.