வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 24 ஜூலை 2016 (09:10 IST)

சரணடைந்தது மேற்கிந்திய தீவுகள் அணி: இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா!

மேற்கிந்திய தீவுகள், இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அபார பந்து வீச்சால் அந்த அணி 243 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ-ஆன் ஆனது.


 
 
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடந்து வருகிறது.
 
இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து, முதல் இன்னிங்ஸ் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியால் இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியவில்லை.
 
அந்த அணியில் எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. அந்த அணியில் பிராத்வொய்ட் மட்டுமே 74 ரன்கள் எடுத்தார். 246 பந்துகளை சந்தித்து அவர் இந்த ரன்னை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 41 விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முஹம்மது ஷமி 66 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
மேற்கிந்திய தீவுகள் அணி 243 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாலோ-ஆன் ஆனது. மீண்டும் களமிறங்கிய அந்த அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 21 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.