1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2015 (12:09 IST)

டெஸ்ட் வாழ்க்கையின் கடைசி நான்கு இன்னிங்ஸிலும் அஸ்வின் சுழலிலேயே வீழ்ந்த சங்ககரா

இலங்கை வீரர் குமார் சங்ககரா இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்ஸிலும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலிலேயே அவுட்டாகி வெளியேறினார்.
 

 
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 
இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் உள்ள சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்ககரா ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டிகளின் நான்கு இன்னிங்ஸிலும் அஸ்வின் சுழலிலேயே வீழ்ந்தார்.
 
முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில், 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அஸ்வின் சுழலில் வீழ்ந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அஸ்வினிடம் வீழ்ந்தார்.
 
அதேபோல நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அஸ்வினிடம் வீழ்ந்தார்.

சங்ககராவின் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸும், இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முரளி விஜய்யிடம் கேட்ச் கொடுத்து அஸ்வினிடமே வீழ்ந்தார். சங்ககரா தனது டெஸ்ட் வாழ்க்கையின் இறுதி நான்கு இன்னிங்ஸிலும் அஸ்வினிடம் வீழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.