கேப்டன்சி சர்ச்சையால் ரோஹித்தும் ஹர்திக்கும் பேசிக்கொள்ளவேயில்லை… பத்திரிக்கையாளர் பகிர்ந்த தகவல்!
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சொந்த அணி ரசிகர்களாலேயே கேலி செய்யப்பட்ட வீரராக ஹர்திக் பாண்ட்யா இருந்தார். அவர் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக மும்பை அணிக்குக் கேப்டனாக்கப் பட்டது சர்ச்சைகளை உருவாக்கியது. ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் அவரைக் கடுமையாக கேலி செய்ய தொடங்கினர். அவர் டாஸ் போட வரும்போது கூட ரசிகர்கள் அவரை கூச்சல் போட்டு அவமானப்படுத்தினர். ஆனால் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதும் அனைத்தும் தலைகீழாக மாறியது.
ஐபிஎல் முடிந்ததும் நடந்த உலகக் கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களம் கண்டது. அப்போது அமெரிக்க சென்ற அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா முதல் சில நாட்களுக்குப் பேசிக் கொள்ளவே இல்லையாம்.
இது சம்மந்தமாக பத்திரிக்கையாளர் விமல் குமார் பகிர்ந்துள்ள வீடியோவில் “கிரிக்கெட் போட்டிகளைக் கவர் செய்ய அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சென்ற பத்திரிக்கையாளர்களில் நானும் ஒருவன். இந்திய அணி பயிற்சி மேல் கொள்ளும்போது என் பார்வை எல்லாம் ஹர்திக் மற்றும் ரோஹித் மேல்தான் இருந்தது. முதல்நாளில் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. ஹர்திக் ஒரு இடத்தில் பயிற்சி மேற்கொண்டால் ரோஹித் ஒரு இடத்தில் இருப்பார்.
ஆனால் இரண்டாம் நாளில் இருந்து அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இதற்குக் காரணம் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தான். டிராவிட்தான் அனைவரையும் இணைந்து கோப்பைக்காக உத்வேகத்தோடு ஆடவேண்டும் என்ற விதையை விதைத்தார்” எனக் கூறியுள்ளார்.