1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Annakannan
Last Updated : வியாழன், 13 நவம்பர் 2014 (21:20 IST)

ரோகித் சர்மா உலக சாதனை; 264 ரன்கள் குவித்து, வரலாறு படைத்தார்

இலங்கைக்கு எதிரான 4ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா, 264 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். இதுவே ஒருநாள் போட்டிகளில் தனியொரு வீரர் குவித்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.
 
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 4ஆவது ஒரு நாள் போட்டியில் பூவா, தலையாவில் வென்ற இந்திய அணி, முதலில் மட்டை பிடித்து ஆடியது.

இதில் முதலில் மெதுவாக ஆடத் தொடங்கிய ரோகித், ஒரு கட்டத்தில் அதிரடியாக விளாசத் தொடங்கினார். இலங்கை பந்து வீச்சாளர்கள் அனைவரின் பந்துகளையும் பாரபட்சம் இல்லாமல் அவர் அடித்து ஆடினார். 173 பந்துகளை மட்டுமே சந்தித்து, 9 சிக்ஸர்கள், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்களைக் குவித்தார். 50ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார்.
 
வீரேந்திர சேவாக் குவித்த 219 ரன்களே இது வரை உலக சாதனையாக இருந்தது. இன்றைய ஆட்டத்தில் அதிரடி ரன் குவிப்பின் மூலம் ரோகித் அதை முறியடித்து முதலிடம் பிடித்தார். மேலும், ஒருநாள் போட்டிகளில் இரண்டு முறை இரட்டைச் சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
 
200 ரன்களுக்கு மேல் குவித்தவர்களின் பட்டியலில் முதல் நான்கு இடங்களிலும் இந்திய வீரர்களே இடம் பெற்றுள்ளனர். இப்போதைய நிலையில், ரோகித் முதலிடத்தில் அவருக்கு அடுத்த இடங்களில் சேவாக், சச்சின் ஆகியோர் உள்ளனர். 
 
இந்த ஆட்டத்தில் இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 404 ரன்கள் குவித்தது. இலங்கை அணியை  153 ரன் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. ரோகித், ஆட்ட நாயகனாகத் தேர்வு பெற்றார். அவருக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.