1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 23 ஏப்ரல் 2016 (12:43 IST)

தோனியை வீழ்த்திய கோலி; டி வில்லியர்ஸ் அதிரடி

தோனி தலைமையிலான புனே சூப்பர்ஜியண்ட்ஸ் அணியை, கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
 

 
ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றின் 16ஆவது ஆட்டத்தில் புனே சூப்பர்ஜியண்ட்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற புனே சூப்பர்ஜியண்ட்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
 
அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் 46 பந்துகளில் [6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 83 ரன்கள் குவித்தார். கேப்டன் விராட் கோலி 63 பந்துகளில் [7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 80 ரன்கள் எடுத்தார்.
 
திசார பெரேரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதேபோல உதிரி வகையிலும் பெங்களூரு அணிக்கு 12 ரன்கள் கிடைத்தது.
 
பின்னர், 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய புனே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 
தொடக்க ஃபாப் டு பிளஸ்ஸி 2 ரன்களும், பீட்டர்சன் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரிட்டையர்ட் ஹர்ட் முறையிலும், ஸ்டீவன் ஸ்மித் 4 ரன்களிலும் வெளியேறினர். இதனால் 18 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
 
தொடக்க ஆட்டக்காரர் ரஹானே சிறப்பாக ஆடி 60 ரன்களை குவித்தார். தோனி 41 ரன்களும், திசர பெரேரா 34 ரன்களும், ராஜத் பாட்டியா 21 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு தரப்பில் கனே ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளையும், ஷேன் வாட்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.