வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 15 மே 2016 (13:29 IST)

பெங்களூரு அணி வரலாற்று வெற்றி; டி வில்லியர்ஸ், கோலி அதிரடி சதம்

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டி வில்லியர்ஸ், கோலி அதிரடி சதத்தால், 144 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸைத் தோற்கடித்தது.
 

 
பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் அணியில் கேப்டன் சுரேஷ் ரெய்னா தனக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து நேற்றைய போட்டியில் இடம்பெறவில்லை. அதனால் பிரண்டன் மெக்கல்லம் தலைமையில் களமிறங்கியது.
 
டாஸ் வென்ற மெக்கல்லம் பீல்டிங்கை தேர்வு செய்தார். கிறிஸ் கெய்லும், விராட் கோலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 13 பந்துகளைச் சந்தித்த கெயில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் குல்கர்னி பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார்.
 
பின்னர் விராட் கோலியுடன் டிவில்லியர்ஸ் இணைந்தார். டி வில்லியர்ஸ் குஜராத் அணியின் பந்துவீச்சை சின்னாபின்னாமாக்கினார். அதேபோல் கோலியும் அதிரடி காட்டி ரசிகர்களுக்கு வேடிக்கை காட்டினர்.
 
கோலி 55 பந்துகளில் [8 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்] 109 ரன்கள் குவித்து வெளியேறினார். இந்த ஜோடி 2 ஆவது விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்தது. இந்த ஜோடியை பிரிக்க குஜராத் அணி கேப்டன் 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பின்னர் வந்த ஷேன் வாட்சன் டக் அவுட்டாக, பெங்களூர் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டி வில்லியர்ஸ் 52 பந்துகளில் [12 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள்] 129 ரன்கள் குவித்தார். 
 
பின்னர் ஆடிய குஜராத் அணி 18.4 ஓவர்களில் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆரோன் ஃபிஞ்ச் 38 பந்துகளில் 37 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 21 ரன்களும், கேப்டன் மெக்கல்லம் 11 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தையே தாண்டவில்லை.
 
பெங்களூர் தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 3 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யுவேந்திர சாஹல் 4 ஓவர்களில் 19 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். டி வில்லியர்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
 
இதனால், பெங்களூரு அணி 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனை பெங்களூர் வசமாகியுள்ளது. முன்னதாக 2008-இல் கொல்கத்தா அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.