வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 30 ஜூன் 2016 (15:22 IST)

ரவி சாஸ்திரி முட்டாள் உலகத்தில் வாழ்கிறாரா? - சவுரவ் கங்குலி கேள்வி

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே கடந்த வாரம் தேர்வு செய்யப்பட்டார். இந்த பந்தயத்தில் கடந்த ஓரண்டு காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குநராக பணி புரிந்த ரவி சாஸ்திரியும் இருந்தார்.
 

 
ஆனால், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ். லட்சுமணன் ஆகிய மூவரின் ஆலோசனையை ஏற்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 
இதுகுறித்து அதிருப்தி தெரிவித்திருந்த ரவி சாஸ்திரி கூறும்போது, தான் நேர்மையாகவும், கடினமாகவும் உழைத்ததாகவும், அக்காலகட்டத்தில் கிரிக்கெட் பிரகாசித்ததாகவும் கூறியிருந்தார்.
 
மேலும், ஸ்கைப் மூலம் லஷ்மண், சஞ்சய் ஜக்தாலே, சச்சின் ஆகியோர் என்னிடம் அருமையான கேள்விகளைக் கேட்டனர் என்றும் சவுரவ் கங்குலி எனது நேர்காணலின் போது இல்லை" என்று குறிப்பிட்டு இருந்தார்.
 
ஏன் நேர்காணலில் கலந்துகொள்ளவில்லை என்ற கங்குலியிடம் கேள்வி எழுப்பியபோது, ரவி சாஸ்திரி கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இதற்கு விரிவாக பதிலளித்துள்ள கங்குலும் “ரவி சாஸ்திரி கொஞ்சம் முதிர்ச்சியுடன் பேசியிருக்கலாம். அவரது கருத்துகள் எல்லாம் தனிநபர் மீதான விமர்சனம். 
 
தலைமைப் பயிற்சியாளராக அவர் தேர்வு செய்யப்படாததற்கு நான்தான் என்று அவர் நினைத்தார் என்றால், அவர் முட்டாள்களின் உலகில் வாழ்கிறார் என்றுதான் நான் கூற வேண்டியுள்ளது.
 
இப்படிப்பட்ட தேர்வுக்குழுவில் அவர் 10 ஆண்டுகளாக இருந்திருக்கிறார். அப்படி இருக்கும்போது அவருக்கு தெரிந்திருக்கும் எதனால் என்று. இனால்தான் அவரது கருத்து ஏமாற்றமளிக்கிறது.
 
நான் சாஸ்திரிக்கு கூறும் அறிவுரை என்னவென்றால், நேர்காணல் நடக்கும்போது அவர் இங்கே இருந்திருக்க வேண்டும். இது நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்று. குடும்பப் பொறுப்புகள் இருப்பதை எங்களால் உணர்ந்துகொள்ள முடிகிறது. அவசர நிலைமைகளையும் உணர்ந்து கொள்ள முடியும்.
 
ஆனால், பாங்காக்கில் விடுமுறையைக் கழித்துக் கொண்டு கேமராவில் தனது நேர்காணலை செய்திருக்கக் கூடாது. இங்கேதான் இருந்திருக்க வேண்டும்.
 
இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே. குறிப்பாக கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் நேர்காணலில் இருந்தார். நான் அனில் கும்ப்ளேவுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், உலகின் சிறந்த வீரர்களில் அவர் ஒருவர்” என்று தெரிவித்துள்ளார்.