கான்பூர் டெஸ்ட் போட்டி நடக்குமா?.. முதல் மூன்று நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு!
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதமும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்களும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதைப் பெற்றார் அஸ்வின். கிரிக்கெட் விளையாடிவரும் வீரர்கள் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளார் அஸ்வின். அதே போல இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் ரிஷப் பண்ட் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் சதமடித்து கலக்கினர்.
இதையடுத்து அடுத்த போட்டி கான்பூர் மைதானத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் கான்பூர் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கான்பூர் போட்டி நடப்பதில் சிக்கலாக வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி போட்டி தொடங்கும் செப்டம்பர் 27 ஆம் தேதி மழை பெய்ய 92 சதவீத வாய்ப்பும், இரண்டாம் நாளில் 80 சதவீத வாய்ப்பும், மூன்றாம் நாளில் 59 சதவீத வாய்ப்பும் உள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் இந்த போட்டி நடக்குமா இல்லை கொஞ்சம் கொஞ்சமாக நடந்து டிராவில் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.