1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Annakannan
Last Updated : செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (21:34 IST)

இந்தியா ஹாட்ரிக் வெற்றி, ஒருநாள் தொடரை வென்று சாதனை

இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஒரு நாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. ரஹானே 106 ரன்களும் தவான் 97 ரன்களும் குவித்தது, இந்த வெற்றியை எளிதாக்கியது.
 
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கான 4ஆவது ஒரு நாள் போட்டி 2014 செப்டம்பர் 2ஆம் தேதி பர்மிங்காமில் நடந்தது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.
   
பூவா, தலையாவில் வென்ற இந்திய கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து இன்னிங்சை குக் மற்றும் ஏல்ஸ் தொடங்கினர். இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.  ஏல்ஸ் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் போல்ட் ஆக்கினார். பின்,கேப்டன் குக்கும்  9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த பேல்லன்ஸ் ஷமியின் பந்துவீச்சில் பலியானார். 10 ஓவர் முடிவதற்குள் இங்கிலாந்து அணி 3  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து போராடிய இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 49.3 ஓவர்களில் 206 ரன்களுக்குச் சுருண்டது.
 
அடுத்து ஆடிய இந்தியா, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ரஹானே, ஷிகார் தவான் ஜோடி, பொறுமையாகப் பந்துகளைத் தேர்ந்தெடுத்து ஆடியது. ரஹானே 100 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். அதில் 10 பவுண்டரிளும் 4 சிக்சர்களும் அடங்கும். அவருடன் இணைந்து ஆடிய தவான், 81 பந்துகளில் 97 ரன்கள் குவித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர்  தன் பங்குக்கு 11 பவுண்டரிளும் 4 சிக்சர்களும் விளாசினார். 
 
ரஹானே ஆட்டமிழந்ததும் விராட் கோஹ்லி களத்தில் இறங்கி ஒரு ரன் அடித்த நிலையில், 30.3 ஓவர்களில் இந்தியா 212 ரன்கள் குவித்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி, மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது. அதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று, இப்போதே தொடரைக் கைப்பற்றிவிட்டது. 
 
இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக, ரஹானே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் படுதோல்வி கண்டதற்கு, ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியா பழி தீர்த்திருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ள நிலையில், இந்த வெற்றி மணிமகுடத்தில் ஒரு வைரமாய் மின்னுகிறது.

 
இந்திய அணிக்கு நமது வாழ்த்துகள்.