வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : செவ்வாய், 19 மே 2015 (14:03 IST)

ஐபிஎல் முதல் தகுதி சுற்று ஆட்டம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சென்னை?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
 

 
8 அணிகள் இடையிலான 8வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 8 தேதி முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்தப் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை (உள்ளூர், வெளியூர் அடிப்படையில்) மோதின.
 
லீக் ஆட்டங்கள் நேற்று முன்தினத்துடன் முடிந்தது. லீக் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளிகள்), மும்பை இந்தியன்ஸ் (16 புள்ளிகள்), பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (16 புள்ளிகள்), ராஜஸ்தான் ராயல்ஸ் (16 புள்ளிகள்) அணிகள் முறையே புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய (பிளே-ஆப்) சுற்றுக்கு முன்னேறின.
 
நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (15 புள்ளிகள்) 5வது இடத்தையும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் (14 புள்ளிகள்) 6வது இடத்தையும், டெல்லி டேர்டெவில்ஸ் (11 புள்ளிகள்) 7வது இடத்தையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி (6 புள்ளிகள்) கடைசி இடத்தையும் பிடித்து போட்டியில் இருந்து வெளியேறின.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 ஆட்டத்தில் ஆடி 9 வெற்றி, 5 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் (18 புள்ளிகள்) முதலிடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முதல் அணியாக தகுதி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணி 8 வெற்றி, 6 தோல்வியுடன் (16 புள்ளிகள்) 2வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. பெங்களூரு ராயல் சேல்ஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சமமான புள்ளிகள் (16 புள்ளி) பெற்றாலும், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றி கூடுதலாக பெற்றதால் 2வது இடத்தை தனதாக்கியது.
 
ஒருநாள் ஓய்வுக்கு பின்னர் இறுதிப்போட்டிக்கான முந்தைய சுற்றின் (பிளே-ஆப்) முதலாவது தகுதி சுற்று ஆட்டம் (குவாலிபையர்-1) மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2-வது இடத்தை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். தோல்வி காணும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு நுழைய மேலும் ஒரு வாய்ப்பாக 2வது தகுதி சுற்றில் விளையாட முடியும்.
 
மேலும் அடுத்த பக்கம்..

இரண்டு முறை (2010, 2011) சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை எல்லா ஆட்டங்களிலும் அரை இறுதி மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்றை கடந்த ஒரே அணியாகும். கேப்டன் தோனி சென்னை அணியின் மிகப்பெரிய சொத்தாக கருதப்படுகிறார்.
 
இந்த போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரன்டன் மெக்கல்லம் (ஒரு சதம், 2 அரை சதத்துடன் 436 ரன்கள்) இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்று இருப்பதால் பிளே-ஆப் ஆட்டத்தில் விளையாடவில்லை.
 

 
வெய்ன் சுமித்துடன் இணைந்து அணிக்கு நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்து வந்த தொடக்க ஆட்டக்காரர் பிரன்டன் மெக்கல்லம் விளையாடாதது சென்னை அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்பட்ட மைக் ஹஸ்சி (சென்னை) 6 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். சென்னை அணியின் பேட்டிங்கில் வெய்ன் சுமித் (325 ரன்கள்), தோனி (328 ரன்கள்), சுரேஷ் ரெய்னா (321 ரன்கள்), டுபிளிஸ்சிஸ் (312 ரன்கள்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் வெய்ன் பிராவோ (20 விக்கெட்டுகள்), ஆஷிஷ் நெஹரா (18 விக்கெட்டுகள்) அசத்தி வருகிறார்கள்.
 
முன்னாள் (2013) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் தடுமாறினாலும், தற்போது எல்லா வகையிலும் வலுப்பெற்ற அணியாக விளங்குகிறது. மும்பை அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (413 ரன்கள்), சிமோன்ஸ் (407 ரன்கள்), பொல்லார்ட் (342 ரன்கள்), பார்த்தீவ் பட்டேல் (304 ரன்கள்) ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் மலிங்கா (19 விக்கெட்டுகள்), மெக்லெனஹான் (14 விக்கெட்டுகள்) ஆகியோர் கலக்கி வருகிறார்கள்.
 

 
ஐபிஎல் போட்டியில் இதுவரை இரு அணிகளும் தலா 20 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா 10 வெற்றி கண்டு சமநிலை வகிக்கின்றன. இந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு லீக் ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் சென்னை அணியும், 2வது ஆட்டத்தில் மும்பை அணியும் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றன.
 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விடலாம் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.