1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 2 மார்ச் 2015 (15:56 IST)

’ஆடுகளங்கள் இந்திய அணிக்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ளன’ - பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு

ஆடுகளங்கள் இந்திய அணிக்கு சாதகமாக அமைக்கப்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்ஃப்ராஸ் நவாஸ் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணி, உலக கோப்பை கிரிக்கேட் போட்டியில் முதல் போட்டியில் இந்தியாவுடன் 73 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸுடன் 130 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்து இருந்தது.

 
அதேபோல் ஜிம்பாப்வே அணியுடனான ஆட்டத்தில்கூட, 20 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்தாலும், பெரும் போராட்டத்திற்கு பின்னரே அந்த அணிக்கு கிட்டியது. இந்நிலையில் ஆடுகளங்கள் இந்திய அணிக்கு சாதகமாக அமைக்கப்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சர்ஃப்ராஸ் நவாஸ் கூறியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “உலகக் கோப்பை போட்டியில் இதுவரை இந்திய அணி விளையாடியுள்ளதை நீங்கள் பார்த்திருந்தால், பிட்சுகள் இந்தியாவிற்கு ஏற்றதுபோல் தயாரிக்கப்பட்டிருப்பது புரியும். ஆனால், இன்றைய போட்டியை பார்த்தீர்களானால், பந்துகள் தாறுமாறாக எகிரிவந்ததை பார்க்க முடியும்.

 
இந்த விவகாரத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என நான் கூறியுள்ளேன். ஐசிசி என்ன நடக்கிறது என்பதை கண்டறிய வேண்டும்” என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், இதே இந்திய அணிதான் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும், முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் போராடியது என்று குறிப்பிட்டுள்ளார்.