வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Tamilarasu
Last Updated : திங்கள், 1 செப்டம்பர் 2014 (13:14 IST)

31 ஆண்டுகளுக்குப் பின், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹராரே நகரில் நேற்று நடந்த பரபரப்பான போட்டியில் மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது. இதன் மூலம் 31 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே வீழ்த்தியிருக்கிறது.

ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா முத்தரப்பு ஒருநாள் போட்டி நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று (2014 ஆகஸ்டு 31) நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும் ஜிம்பாப்வே அணியும் மோதின.
 
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. தொடக்கம் முதலே ஜிம்பாப்வே சுழற்பந்து வீச்சில் ஆஸ்திரேலியா திணறியது.

கேப்டன் மைக்கேல் கிளார்க் மட்டும் சிறிது தாக்குப் பிடித்து, 102 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார், பிராட் ஹாடின் 49 ரன்களும், பென் கட்டிங் 26 ரன்கள் அடித்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினர்.

ஆஸ்திரேலியா, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழந்து 209 ரன் மட்டுமே எடுத்தது. இதுவே ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் குறைந்த பட்ச ஸ்கோர் ஆகும். 

ஜிம்பாப்வே அணியில் உட்சேயா, டிரிபனோ இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
 
பின்னர் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் டினோ மவோயோ, 44 பந்துகளில் 15 ரன்களும், சிக்கந்தர் ரஸா 32 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பிஆர்எம் டெய்லர் 26 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கேப்டன் ஈ சிகும்புரா, பி உத்செயா இருவரும் பொறுப்புடன் விளையாடினர். ஈ சிகும்புரா, 68 பந்துகளில் 50 ரன்களும் பி உத்செயா 28 பந்துகளில் 30  ரன்களும் அடித்தார்கள்.

ஜிம்பாப்வே, 48 ஓவர்களில் 7 விக்கெட் இழந்து 211 ரன் பெற்று, மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு முன்பு 1983 உலகக் கோப்பைப் போட்டியில், ஆஸ்திரேலியாவை ஜிம்பாப்வே அணி வென்றது. அதன் பிறகு, 31 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவிடம் இருந்து ஜிம்பாப்வே பெற்ற மிகப் பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.