ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் சுருண்டது நியூசிலாந்து - 4 பேர் ’டக்’ அவுட்; 183க்கு ஆல் அவுட்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: ஞாயிறு, 29 மார்ச் 2015 (17:45 IST)
உலகக்கோப்பை போட்டியின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 
உலக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
 
 
அதன்படி முதலில் மார்டின் கப்திலும், பிரண்டன் மெக்கல்லமும் களமிறங்கினர். மெக்கல்லம் சந்தித்த 2ஆவது பந்தை அடித்து ஆட முயற்சித்தார். ஆனால், ஸ்டார்க் அற்புதாமாக அதை லெக் சைடில் வீசி கட்டுப்படுத்தினார். ஆனால் அடுத்த பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
 
முதல் ஓவரிலேயே அவுட்டானது அதிர்ச்சிகரமாக அமைந்தது. 3 ஓவர்களுக்கு 11 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பின்னர் மார்டின் கப்திலும் 15 ரன்களில் வெளியேறினார். அடுத்ததாக வில்லியம்சனும், ஜான்சன் பந்துவீச்சில் ஜான்சனிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
 
இதனால், 39 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இந்நிலையில், ராஸ் டெய்லரும், கிராண்ட் எல்லியாட்டும் ஆஸியின் முரட்டு பந்துவீச்சிற்கு ஈடு கொடுத்து ஆடினர். சிறப்பாக ஆடிய எல்லியாட் 51 பந்துகளில் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 50 ரன்கள் எடுத்தார்.
 
அரைச்சதம் எடுத்த கிராண்ட் எல்லியாட்
பேட்டிங் பவர்பிளே ஆரம்பித்ததும் முதல் பந்திலேயே ராஸ் டெய்லர் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஆண்டர்சன், ரோஞ்சி இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்த வந்த வெட்டோரியும் ஜான்சன் பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.
 
டிம் சவுதி 9, ஹென்றி 0 என அடுத்தடுத்து வெளியேற நியூசிலாந்து அணி 45 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 150 ரன்களுக்கு 3 விக்கெட் என்றிருந்த நியூசிலாந்து, அடுத்து 33 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.
 
நியூசிலாந்து வீரர்களில் மெக்கல்லம் உட்பட 4 வீரர்கள் டக் அவுட் ஆகி வெளியேறினர். ஆஸ்திரேலியா தரப்பில் ஜான்சன் மற்றும் ஃபால்க்னர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


இதில் மேலும் படிக்கவும் :