1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2015 (20:16 IST)

இந்தியாவின் வெற்றிகளுக்கு தோனியின் தைரியமான கேப்டன்ஷிப் முக்கியமானது - கபில் தேவ் புகழாரம்

இந்தியாவின் வெற்றிகளுக்கு தோனியின் தைரியமான கேப்டன்ஷிப் முக்கியமானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், 1983ல் இந்திய அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுக் கொடுத்தவருமான கபில் தேவ் புகழ்ந்துள்ளார்.
வங்கதேசத்திற்கு எதிரான காலிறுதி முடிவையும் சேர்த்து இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியாக 7 ஆட்டங்களில் வெற்றிகளை குவித்து பிரமாதப்படுத்தியுள்ளது. 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையையும் கணக்கில் கொண்டால் நடப்பு சாம்பியன் இந்திய அணி உலகக்கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக ருசித்த 11-வது வெற்றி இதுவாகும்.
 
உலகக்கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் இந்திய அணி வங்கதேசத்தை 193 ரன்களில் சுருட்டி வதம் செய்ததுடன், அரையிறுதியையும் எட்டியது. இந்நிலையில், இந்தியாவின் வெற்றிகளுக்கு தோனியின் தைரியமான கேப்டன்ஷிப் முக்கியமானது என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் பாராட்டியுள்ளார்.
 
1983ஆம் ஆண்டைய உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் உலகக்கோப்பையை வென்றது. அப்போது இந்திய அணியினை வழிநடத்திய, முன்னாள் கேப்டன் கபில் தேவ், தற்போதைய இந்திய அணியின் கேப்டன் தோனியை வெகுவாக பாராட்டியுள்ளார்.
 
"இந்தியாவை பொறுத்தவரையில் இது தோனியின் படையாகும், கேப்டன் என்பதற்கு மிகவும் பொறுத்தமானவர். அவருக்கு கீழ் அதிகமான வீரர்கள் விளையாடுகின்றனர், அவர்கள் அனைவரும் தோனியுடன் உண்மையான தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை காண முடிகிறது.” என்று கூறியுள்ளார். இந்தியாவின் பந்துவீச்சும் மிகவும் ஆற்றல் மிக்கதாக உள்ளது என்றும் பாராட்டியுள்ளார். தோனி மிகவும் சரியான கேப்டன் ஆவார் என்று கபில் தேவ் மெச்சும்படியாக கூறியுள்ளார்.
 
தனது உடல்மொழி மற்றும் வீரர்களுடனான நிலையான தொடர்பு ஆகியவற்றை தெளிவாககொண்டு தோனி அணியை வைத்துள்ளார். வீரர்கள் மீதான அவருடைய நம்பிக்கை, அவர்களை ஆற்றலுடன் செயல்பட உதவியாக இருக்கும், இவை அனைத்தும் அவர்கள் மீண்டும் உலகக்கோப்பையை வெற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்று கபில் தேவ் பேசியுள்ளார்.
 
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், நேற்று நடந்த காலிறுதியில் இந்திய அணி வங்கதேசத்தை 109 ரன்கள் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது. இது தோனி தலைமையில் இந்தியாவுக்கு கிடைத்த 100-வது வெற்றியாகும். உலக அரங்கில் இந்த மைல்கல்லை எட்டிய 3-வது கேப்டன் என்ற பெருமையையும், தோனி தட்டிச் சென்றார்.
 
தோனி தலைமையில் இந்தியா விளையாடிய 177 ஒருநாள் போட்டிகளில் 100 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் (230 ஆட்டங்கள், 165 வெற்றி, 51 தோல்வி, 2- டை, 12- முடிவில்லை) உள்ளார். இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் ஆலன் பார்டர் (278 ஆட்டங்கள், 107 வெற்றி, 67 தோல்வி, 2- டை, 3- முடிவில்லை) உள்ளார். 
 
தோனியின் தலைமையிலே 3 ஐசிசி கோப்பையை இந்தியா வென்றுள்ளது. 2007ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையையும், 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையையும், 2013ஆம் ஆண்டு சாம்பியன் டிராபியையும் இந்தியா வென்றது.