1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 24 அக்டோபர் 2016 (16:12 IST)

நெருப்புடா! - தல ‘தோனி’யின் தொடரும் சாதனைகள்; சச்சின் சாதனையும் முறியடிப்பு

இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி, நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 9000 ரன்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
 

 
நேற்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் விராட் கோலி 154 ரன்களும், கேப்டன் தோனி 80 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர்.
 
இதில் தோனி 22 ரன்கள் எடுத்திருந்த போது 9000 ரன்களை கடந்தார். இதன்மூலம் சர்வதேச அளவில் 9ஆயிரம் ரன்களை கடந்த 3ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, இலங்கையின் குமார் சங்ககாரா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் இருவரும் 9ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர்.
 
மேலும், இவர்களை விட குறைந்த இன்னிங்ஸில் 9ஆயிரம் ரன்களை கடந்தும் சாதனைப் படைத்துள்ளார். தோனி 244 இன்னிங்ஸிலும், சங்ககாரா 252 இன்னிங்ஸிலும், ஆடம் கில்கிறிஸ்ட் 262 இன்னிங்ஸிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
 
ஒருநாள் போட்டியில் 50 மற்றும் அதற்கு மேல் 50 சராசரியோடு 9 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக ஜாக் காலில் 45.68 சராசரியோடு கடந்ததே சாதனையாக இருந்து வந்துள்ளது.
 
10109 பந்துகளை சந்தித்து தோனி 9 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். இதவும் ஒரு சாதனையாக உள்ளது. அதாவது குறைந்த பந்துகளில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள் பட்டியலில் தோனி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் கில்கிறிஸ்ட் 9328 பந்துகளை எதிர்கொண்டும், சானத் ஜெயசூர்யா 10094 பந்துகளை எதிர்கொண்டும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.
 
தோனி நேற்று 3 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மொத்தம் இதுவரை 196 சிக்ஸர் அடித்துள்ளார். அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் 229 சிக்ஸர் விளாசி முதலிடத்தில் உள்ளார். மூன்றாவதாக சச்சின் டெண்டுல்கர் [195 சிக்ஸர்கள்] உள்ளார்.