1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 22 ஜூலை 2014 (11:11 IST)

லார்ட்ஸில் 28 ஆண்டுகளுக்குப் பின் சாதித்த இந்தியா: 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 28 ஆண்டுக்கு பின் சாதனையை படைத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதிய 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா முதல் இன்னிங்சில் 295 ரன்னும், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்னும் எடுத்தனர். 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்சில் இந்திய அணி 342 ரன் குவித்தது. இதனால் இங்கிலாந்துக்கு 319 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

4 ஆவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 105 ரன் எடுத்திருந்தது. ஜோரூட் 14 ரன்னும், மொய்ன் அலி 15 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் லார்ட்ஸ் டெஸ்டில் பரபரப்பாக இருந்த கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி 95 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து அணியின் எஞ்சியிருந்த 6 விக்கெட்டுகளையும் எளிதில் கைப்பற்றி இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

வெளிநாட்டு மண்ணில் இந்தியா வெற்றி பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், (கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் கிங்ஸ்டன் டெஸ்டில் 63 ரன்னில் வெற்றி பெற்றது.) தற்போது இந்த வெற்றியைப் பெற்றுள்ளது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வெற்றிப் பெற்றுள்ள இந்திய அணியினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். 1986 ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான அணி 5 விக்கெட்டில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆட்டம் தொடங்கியபோது இங்கிலாந்து அணி ரூட் நிலைத்து நின்றதால் இந்திய அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அரை சதம் கடந்த அவரை 66 ரன்களில் வெளியேற்றினார் இஷாந்த் சர்மா.

இதனால் இங்கிலாந்து அணி 223 ரன்களில் சுருண்டது. இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷாந்த் சர்மா 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.