1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (18:21 IST)

இந்திய டெஸ்ட் போட்டிக்கு மணி அடிக்கவுள்ள கபில்தேவ்

இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடவுள்ள 250வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை முன்னாள் கேப்டன் கபில்தேவ் மணியடித்து தொடங்கி வைக்க உள்ளார்.
 

 
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இது இந்தியாவின் 500ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற வெள்ளிக்கிழமை [30-09-15] அன்று, கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் இந்திய மண்ணில் நடைபெறும் 250-வது டெஸ்ட் போட்டி ஆகும். இதையொட்டி கொல்கத்தா கிரிக்கெட் சங்கம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
 
அதன்படி, 250-வது டெஸ்ட் போட்டியை ஒட்டி கங்குலியின் யோசனைப்படி முன்னாள் கேப்டனும் உலக சாதனையாளருமான கபில்தேவ் மணியடித்து போட்டியை தொடங்கி வைக்கிறார். இதற்கு அவரும் ஒப்புக்கொண்டுள்ளார். போட்டி நடைபெறும் 5 தினங்களிலும் முக்கிய பிரமுகர்கள் மணியடித்து போட்டியை தொடங்கி வைப்பார்கள்.
 
இதற்காக ஈடன் கடிகாரம் அருகே வெள்ளியால் பூசப்பட்ட மிகப்பெரிய மணி தொங்க விடப்படுகிறது. 250-வது டெஸ்டை ஒட்டி ‘டாஸ்’ போட தங்க நாணயத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரு அணி வீரர்களும் வெள்ளி நாணயம் வழங்கி பாராட்டப்படுவார்கள். ஒவ்வொரு வெள்ளி நாணயத்தின் எடை 100 கிராம் ஆகும்.
 
போட்டியின் 3ஆவது நாளில் பாராட்டு விழா நடைபெறும். லார்ட்ஸ் மைதானத்தை போல் முதல் முறையாக ஈடன்கார்டன் மைதானத்தில் மணியடித்து போட்டி தொடங்கி வைக்கப்படுகிறது.