வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2024 (08:05 IST)

கடைசி டெஸ்ட் போட்டியில் மைல்கல் சாதனையை எட்டிய ஆண்டர்சன்!

2003 ஆம் ஆண்டு தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆண்டர்சன் தற்போது 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச டெஸ்ட் போட்டி சாதனையை 200 டெஸ்ட் போட்டி என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் அவர் தன்னுடைய ஓய்வு முடிவை வெளியிட்டார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தற்போது நடந்து வரும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசியாக இங்கிலாந்து அணிக்காக விளையாடுகிறார் ஆண்டர்சன். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்த இன்னிங்ஸில் 10 ஓவர்கள் பந்துவீசிய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 40000 பந்துகளை வீசிய பவுலர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்னர் முரளிதரன் (44,039 பந்துகள்), அனில் கும்ப்ளே(40,850) மற்றும் ஷேன் வார்ன் (40,705) ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் சுழல்பந்து வீச்சாளர்கள். 40000 பந்துகள் வீசிய முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ளார்.