1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 31 ஜனவரி 2015 (06:11 IST)

இந்தியா பேட்டிங்கில் சொதப்பல்: முத்தரப்பு ஒருநாள் தொடரில் படுதோல்வி

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பியதால் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி, இங்கிலாந்து தோல்வி அடைந்து வெளியேறியது.
 
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணி 15 புள்ளிகளுடன் (3 வெற்றி, ஒரு முடிவில்லை) இறுதிப்போட்டிக்கு முன்னேறி விட்டது.
 

 
இந்நிலையில், இன்று நடைபெற்ற கடைசி லீக்கில் இந்தியா –இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என்ற நிலையில் இன்றைய ஆட்டம் நடைபெற்றது. 
 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதன்படி இந்திய அணி முதலில் தனது பேட்டிங்கை தொடங்கியது. இந்தியா தனது முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை தந்தது.
 
தொடக்க வீரர் ஷிகர் தவான் 38 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் வழக்கம்போல் வீரர்கள் எல்லைக்கோட்டிற்கும், பிட்சுக்கும் இடையே அணிவகுப்பு நடத்தினார்கள். ரஹானே மட்டும் தாக்குப் பிடித்து 73 ரன்கள் குவித்தார்.
 

அரைச்சதம் அடித்த ரஹானே...
 
இந்திய வீரர்களில் 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. அதில், விராட் கோலி, ரெய்னா, ஜடேஜா, பின்னி உள்ளிட்ட பேட்ஸ்மேன்களும் அடங்குவர். கடைசிக் கட்டத்தில் அதிரடியாக விளையாடிய முகமது சமி 18 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 200 ரன்னைத் தொட்டது.
 
இறுதியாக இந்திய அணி 48.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன் ஃபின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

பின்னர் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்களை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் மிரட்டி எடுத்தனர். இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து வெறும் 66 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
 

ஜோஸ் பட்லர் மற்றும் ஜேம்ஸ் டெய்லர்...
 
பின்னர், களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் ஜேம்ஸ் டெய்லர் இணை நேர்த்தியான ஆட்டம் மூலம் இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டு சென்றார். இறுதியில் இங்கிலாந்து அணி 46.5 ஓவர்களுக்கு 7 விக்கெட்களை இழந்தது 201 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
 
இதன் மூலம், இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய அணி ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.