வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 18 அக்டோபர் 2014 (09:57 IST)

4 ஆவது ஒரு நாள் போட்டி: இந்தியா அபார வெற்றி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4 ஆவது ஒரு நாள் போட்டியில் விராட் கோலியின் சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 4 ஆவது ஒரு நாள் போட்டி தர்மசாலாவில் அக், 17 நேற்று நடந்தது. இதில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராவோ பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான், ரஹானே இருவரும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். 
 
முதல் விக்கெட்டுக்கு 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தவான் 35 ரன்னில் ரஸ்செல் வீசிய பந்தை தூக்கியடித்த போது கேட்ச் ஆனார். பின்னர் ரஹானே 68 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.
பின்னர் கோலி-ரெய்னா கூட்டணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். 
 
அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த ரெய்னா 71 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விராட் கோலி தனது 20 ஆவது சதத்தை எட்டினார். பின்னர் கேப்டன் தோனியும் 6 ரன்னில் வெளியேறினார். இறுதி பந்தில் ரன்-அவுட் ஆன கோலி 127 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி  330 ரன்கள் எடுத்தது.
 
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அணியில் சாமுவேல்ஸ் மட்டும் தனது 7 ஆவது சதத்தை அடித்தார். 
 
எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணி 271 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இதனால் ஒரு நாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.