1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 9 டிசம்பர் 2014 (15:20 IST)

இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் ஆஸ்திரேலிய அணி

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர்.
 
ஆஸ்திரேலிய அணி 50 ரன்கள் எடுத்திருந்தபோது இஷாந்த் சர்மா பந்தில் ரோஜர்ஸ் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின்னர் வாட்சனும் 14 ரன்களில் வெளியேறி ஆஸ்திரேலிய ரசிகர்களை ஏமாற்றினார். எனினும் தன் பங்கிற்கு விளையாடிய வார்னர், 106 பந்துகளில் அவரது சதத்தை பதிவு செய்தார். இது அவரது 10வது சதமாகும். பின்னர் கேப்டன் கிளார்க்கும் தனது 28 ஆவது அரைசத்தை எட்டினார்.
 
போட்டியின் 44 ஆவது ஓவரின்போது கேப்டன் கிளார்க், முதுகுவலி காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதனால் ஸ்டீவன் ஸ்மித் அணியில் இணைந்தார். அசத்தல் ஆட்டத்தை வெளிபடுத்திகொண்டிருந்த வார்னர் 145 ரன்கள் எடுத்த போது, கரண் சர்மாவிடம் சரண் அடைந்தார்.
 
மறுமுனையில் ஸ்டீவன் ஸ்மித்தும் அரைசதத்தை எட்டினார். மிட்சல் மார்ஷ் 41 ரன்களிளும்,  நாதன் லியான் 3 ரன்களிளும், பிராட் ஹாடின் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினர்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் வருண் ஆரோன், ஷமி தலா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, கரண் சர்மா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
போட்டி துவங்குவதற்கு முன், இரு அணி வீரர்களும் மறைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ்க்கு 63 வினாடிகள் மவுன அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.