வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 25 மார்ச் 2017 (16:52 IST)

கடைசி டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியாவை 300 ரன்னில் கட்டுப்படுத்தியது இந்தியா!

கடைசி டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலியாவை 300 ரன்னில் கட்டுப்படுத்தியது இந்தியா!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வெற்றிபெற்ற நிலையில் மூன்றாவது போட்டியை ஆஸ்திரேலியா போராடி சமன் செய்தது.

 
இந்நிலையில் தொடரின் வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிக்கும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரென்ஷா 1 ரன்னில் வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வார்னர் மற்றும் பின்னர் களம் இறக்கிய கேப்டன் ஸ்மித் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல தொடக்கத்தை அளித்தனர். அணியின் எண்ணிக்கை 144-ஆக இருந்த போது 56 ரன் எடுத்திருந்த வார்னர் அவுட் ஆனார்.
 
தொடர்ந்து களம் இறங்கியவர்கள் பொறுப்பாக ஆடாமல் விக்கெட்டை பறிகொடுத்தாலும் மறுமுனையில் கேப்டன் ஸ்மித் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் ஆறாவது விக்கெட்டாக 111 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய மேத்திவ் வேட் மட்டும் அரை சதம் அடித்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்னிலே ஆட்டமிழந்தனர்.
 
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் விராட் கோலி காயம் காரணமாக இந்த போட்டியில் களம் இறங்கவில்லை. அறிமுக பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டையும், புவனேஷ்வர் குமார், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு 1 ஓவர் மட்டும் வீசப்பட்டது. இதில் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் விஜய் ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.