1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2016 (13:38 IST)

இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி ரத்தாகுமா?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மேற்கொள்ள வேண்டிய கடுமையான சீர்த்திருத்தங்களுக்கான பரிந்துரை அறிக்கையை முன்னாள் தலைமை நீதிபதி லோதா கமிட்டி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
 

 
இந்தப் பரிந்துரைகள் மற்றும் சீர்திருத்தங்கள் அடங்கிய 159 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும், அந்த பரிந்துரைகளுக்கு அனைத்தையும் அப்படியே அமல்படுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
 
இதில் பல பரிந்துரைகளை கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தாததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
 
இதற்கிடையில், கடந்த மாதம் கிரிக்கெட் வாரியம் நிர்வகித்து வரும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும் எஸ் பாங்க் ஆகிய இரண்டு வங்கி கணக்குகளை முடக்கியது.
 
தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. நாளை முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 
லோதா கமிட்டியின் நெருக்கடி காரணமாக, போட்டிகளை நடத்தும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு, பிசிசிஐ-யால் நேரடியாக நிதி வழங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போட்டியை நடத்த பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திட வேண்டியுள்ளது.
 
இது குறித்து கூறியுள்ள பிசிசிஐ-யின் வழக்கறிஞர் கபில் சிபல் கூறுகையில், “வங்கி நிதிகளை வெளியிடாவிட்டால், நாளை நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டி நடைபெறுவது சந்தேகம்தான்” என்று கூறியுள்ளார்.