1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 30 ஜூலை 2015 (18:11 IST)

”விராட் கோலியுடன் விளையாடி இருந்தால் நிறைய கற்றிருப்பேன்” - கருண் நாயர்

விராட் கோலியுடன் இன்னும் சிறிது நேரம் விளையாடி இருந்தால் நான் இன்னும் நிறைய கற்றிருப்பேன் என்று ஆஸ்திரேலியா அணியுடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்த கருண் நாயர் கூறியுள்ளார்.
 

 
இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 2ஆவது பயிற்சி ஆட்டம் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் மைதானத்திற்கு வருவதும், கேலரிக்கு திரும்புவதுமாக அணிவகுப்பை நடத்தினர். தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் 15 ரன்களும், சதீஸ்வர் புஜாரா 11 ரன்களும், விராட் கோலி 11 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னும், நமன் ஓஜா 10 ரன்களும், பாபா அபாராஜித் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
 
அடுத்து வந்த 4 வீரர்களும் ஒற்றை இலக்கத்தைக் கூட தாண்டாமல் அவுட் ஆகி வெளியேறினார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்குள் சுருண்டது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக கருண் நாயர் மட்டும் 50 ரன்கள் எடுத்திருந்தார்.
 
இந்நிலையில், இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கருண் நாயர், ”நான் விராட் கோலியுடன் நிறைய நேரம் விளையாடுவேன் என்று நம்பிக்கையோடு இருந்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் வெளியேறிவிட்டார். அவருடன் இணைந்து நீண்ட இன்னிங்ஸை விளையாடி இருந்திருந்தால், அவரிடமிருந்து இன்னும் நிறைய கற்றுக்கொண்டிருப்பேன்.
 
அவருடன் நெருங்கி இருந்து கவனித்து இருந்திருந்தால் சில விஷயங்களை நான் கையாண்டிருக்க முடியும். ஆனால், அவர் வெளியேறிவிட்டார். அவருடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு இரண்டாவது இன்னிங்ஸில் கிடைக்கும் என்று நம்புகிறேன்”.
 
இந்த இன்னிங்ஸில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக களத்தில் நின்று விளையாடிய விராட் கோலி 42 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
 
இது குறித்து கருண் நாயர் கூறுகையில், “இந்த விக்கெட் மெதுவாகவும், அதே சமயம் சற்று சுழன்றும் வந்த பந்தினால் வீழ்த்தப்பட்டது என்று நினைக்கிறேன். இந்த பந்து அருமையாக வீசப்பட்டது. பேட்டிங் செய்வதற்கும், ரன் குவிப்பதற்கும் கடினமாக இருந்தது.
 
அவர்கள் ஒரு பந்தைக்கூட ஃப்ரீ பாலாக வீசவில்லை. அதே சமயம் நாம் வழக்கமான பாணியிலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டோம். அவர்களுக்கு எதிராக இதனை வாய்ப்பாக எடுத்துக் கொள்வது என்பது சிரமமானது. அவர்கள் ஒழுக்கமுடனும், நிதானமாகவும் பந்து வீசினர். அதே சமயம் அவர்கள் எளிமையான பந்தை ஒன்றைக் கூட எங்களுக்கு வழங்கவில்லை” என்று கூறினார்.