1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2015 (16:30 IST)

’இந்திய அணியில் இடம் பிடித்து கவுரமாக ஓய்வுபெற வேண்டும்’ - ஷேவாக் விருப்பம்

இந்திய அணியில் இடம் பெற்று கிரிக்கெட்டிலிருந்து கவுரமாக ஓய்வு பெற விரும்புகிறேன் என்று அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் விருப்பம் தெரிவித்துள்ளார்.
 
இந்திய அணியில் அதிரடிக்கு பேர் போனவர் வீரேந்திர ஷேவாக். இந்திய அணி உலகக்கோப்பையை வென்றதற்கு காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர். கடந்த 2 வருடத்திற்கும் மேலாக அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.
 
கண்ணாடி அணிந்துகொண்டு ஆடும் ஷேவாக்
2013ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்று ஆடியிருந்தது கடைசியாகும். அதன் பிறகு அணியில் இடம் பெறவில்லை. மேலும்,  இந்த ஆண்டு நடந்து முடிந்த உலகக்கோப்பையில் வீரேந்திர ஷேவாக் சேர்க்கப்படவில்லை. தற்போது நடைபெற்றுவரும் 8ஆவது ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.
 
இந்நிலையில் தான் இந்திய அணியில் இடம் பெற்ற பின்பு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஷேவாக் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஷேவாக் கூறுகையில், ”கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தொடரின்போது எனக்கு கண்ணில் பிரச்சனை ஏற்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து எனக்குத் தலைவலியும் வந்தது. இதனால் என்னால் சரியாக ஆட முடியவில்லை. இந்தியா வந்த பிறகு எனது மருத்துவரிடம் ஆலோசனை நடத்தியபோது தூரப் பார்வை பிரச்சனை இருப்பதாக அவர் கூறினார்.
 
இதையடுத்து நான் கண்ணாடி போட ஆரம்பித்தேன். அதற்குப் பழக்கப்படவே எனக்கு ஒரு வருடமாகி விட்டது. என்னால் பந்தை சரியாக கணித்து அடிப்பதில் சிரமம் இருந்தது. தற்பொழுது நான் சிறந்த முறையில் பேட்டிங் செய்து ரன் குவித்து வருகிறேன்.
 
ஒவ்வொருவருக்கு இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். என்னால் முடிந்தவரை சிறப்பாக ஆட முயற்சிப்பேன். இந்திய அணியில் இடம் பெற்று கிரிக்கெட்டிலிருந்து கவுரமாக ஓய்வு பெற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.