வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 24 டிசம்பர் 2018 (11:33 IST)

ஆம் நான் தவறாக அறிவித்து விட்டேன்! - ஒப்புக்கொண்ட சர்ச்சை நடுவர்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடியது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில், முதல் 2 ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் இருந்த நிலையில் கடைசி போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது, வெஸ்ட் இண்டீஸ் அணி. 


 
இந்த போட்டியின் போது, வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஓசானே தாமஸ் பந்துவீசும் போது இரண்டு முறை நோ-பால் என்று அறிவித்தார் பங்களாதேஷ் நடுவர் தன்வீர் அகமது. இதையடுத்து வழங்கப்பட்ட ’ஃபிரி ஹிட்’ பந்துகள் சிக்சருக்கு பறந்தன. இரண்டாவது முறை நடுவர் நோ பால் என்று அறிவித்ததும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கார்லோஸ் பிராத்வெயிட் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
இரண்டு பந்துகளும், நோ பால் அல்ல என்று டிவி. ரீப்ளேவில் தெரிய வந்தது. இதனால் கோபமடைந்த பிராத்வொயிட், நடுவரிடம் வாக்குவாதம் செய்தார். போட்டி நடுவரிடமும் இதுபற்றி முறையிட்டார். இதனால் 8 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. இருந்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் நடுவரின் தவறான முடிவை விமர்சித்தார். 


 
இந்நிலையில் நடுவர் தன்வீர் அகமதுவிடம் இந்த சர்ச்சை பற்றி கேட்டபோது, ’’வேகபந்துவீச்சாளர்கள் லைனில் சரியாக காலை வைக்க வேண்டும். வேகமாக அவர்கள் வீசும்போது, சில நேரம் அதைச் சரியாகக் கணிப்பது கடினம். அதனால் நான் தவறு செய்துவிட்டேன். நான் சர்வதேச போட்டிக்கு புதிதானவன் (3, டி20 போட்டிகள்). இதற்கு முன் முதல் தர போட்டிகளில் என் மீது இதுபோன்ற புகார்கள் ஏதுமில்லை. இதில் இருந்து நான் மீண்டு வருவேன். ஒவ்வொருவருக்கும் நல்ல நாட்களும் மோசமான நாட்களும் இருக்கின்றன. எனக்கு அது மோசமான நாளாக ஆகிவிட்டது. இப்போது என் தவறைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன்’’ என்றார்.


 
தன்வீர் முதல் தர போட்டிகளிலும் இப்படி தவறான முடிவுகள் எடுத்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். தாகா பிரிமீயர் லீக் போட்டியில் தமிம் இக்பால், ஷகிப் அல் ஹசன் உள்ளிட்டோருடன் அவர் ஏற்கனவே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல் .