வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (11:26 IST)

சுய லாபத்திற்காக ஐபிஎல். போட்டிகளை பயன்படுத்தமாட்டேன் - கம்பீர் அதிரடி

இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்பும் நோக்குடன் ஐ.பி.எல்.-ல் விளையாடமாட்டேன் என்று கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.அதாவது சுய லாபத்திற்காக இந்தப் போட்டிகளை பயன்படுத்தமாட்டேன் என்று கூறியுள்ளார் கம்பீர்.

 
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதற்கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற உள்ளது. 16-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் அபுதாபியில் சந்திக்கின்றன. இதையொட்டி கொல்கத்தா அணி வீரர்கள் அபுதாபிக்கு சென்று விட்டனர்.

அங்கு வளைகுடா செய்தி நிறுவனத்துக்கு கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

கொல்கத்தா அணிக்காகவும், ரசிகர்களுக்காகவும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே இப்போது எனது இலக்கு. எனது சொந்த லாபத்துக்காக அதாவது மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்காக இந்த போட்டியை பயன்படுத்த மாட்டேன். எப்போதும் எனது அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் தான் விளையாடுவேன். அப்படி தான் தயாராகி வருகிறேன்.
தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை சந்திக்கிறோம். அந்த அணி தரமான வீரர்களை கொண்ட அணி. அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடினால் அதன் மூலம் நிறைய நம்பிக்கையை பெற முடியும். 2012-ம் ஆண்டு ஐ.பி.எல். சீசனில் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்தித்தோம். அந்த ஆட்டத்தில் நாங்கள் தோற்று போய் விட்டோம். ஆனால் அதன் பிறகு வலுவான அணியாக மீண்டெழுந்து கோப்பையை வசப்படுத்தினோம். எங்களை பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் இருந்தே சாதகமான விஷயங்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறோம்.
இது புதிய சீசன், புதிய அணி, புதிய சவால். எங்கள் அணியில் சில திறமையான ஆர்வமுடைய இளம் வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் நெருக்கடியின்றி சுதந்திரமாக விளையாடி தங்களது முழுதிறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
 
இவ்வாறு கம்பீர் கூறினார்.
 
இதற்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் வாசிம் அக்ரம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
 
2010-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கொல்கத்தா அணியின் பந்து வீச்சு ஆலோசகராக செயல்பட்ட வாசிம் அக்ரம், கடந்த ஆண்டு தனிப்பட்ட காரணங்களுக்காக கொல்கத்தா அணியில் இருந்து விலகி இருந்தார்.
 
இந்த நிலையில் மறுபடியும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்ட அவர் அணியுடன் இணைந்து வீரர்களை தயார்படுத்தும் பணியை தொடங்கி உள்ளார்