1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (16:13 IST)

முதல் மூன்று பந்துகளில் மூன்று விக்கெட் வீழ்த்தி சாதனை

ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை சாய்த்து வொர்செஸ்டர்ஷைர் அணி வீரர் ஜோ லீச் சாதனைப் படைத்துள்ளார்.
 
இங்கிலாந்தில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் கவுண்டி ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. லண்டனில் நடந்த ‘குரூப்–ஏ’ போட்டியில் வொர்செஸ்டர்ஷைர், நார்தாம்ப்டன்ஷைர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நார்த்தம்ப்டன்ஷைர் அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
இதில், 35.1 ஓவர்கள் முடிவில் நார்த்தம்ப்டன்ஷைர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிளைன்வெல்ட் 33 ரன்களும், கோப் 32 ரன்களும், வொய்ட் 27 ரன்களும் எடுத்தனர். அந்த அணியின் 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதில், ஜோ லீச் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் மூன்று பந்தில் ரிச்சர்டு லெவி, ராப் கெயோக், பென் டக்கெட் ஆகியோர் ‘டக்–அவுட்’ ஆகி வெளியேறினார்கள். இதன்மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் அரங்கில் முதல் ஓவரில் முதல் மூன்று பந்தில் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த சம்பவம் 2ஆவது முறையாக அரங்கேறியது.
 
இதற்கு முன்னதாக, 2003இல் வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் இலங்கையின் சமிந்தா வாஸ் இச்சாதனை படைத்தார். இப்போட்டியில் ஜோ லீச் 4 விக்கெட் வீழ்த்தினார். சாண்ட்ரை விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
 
ஆனால், பின்னர் களமிறங்கிய வொர்செஸ்டர்ஷைர் அணி 31 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அணியில், அதிகபட்சமாக காக்ஸ் 36 ரன்களும், ஜோ லீச் 21 ரன்களும் எடுத்தன.
 
இந்த அணியிலும் 7 வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், வொர்செஸ்டர்சைர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.