1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 16 ஆகஸ்ட் 2014 (08:22 IST)

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆவது டெஸ்ட் போட்டி: 148 ரன் மட்டுமே எடுத்தது இந்தியா

5 ஆவது டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதன் 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியில், ஜடேஜாவுக்கு பதிலாக ஸுடுவார்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று பங்கஜ் சிங்கிற்கு பதிலாக இஷாந்த் சர்மா இடம் பெற்றனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் குக் தனது அணி முதலில் பந்து வீசும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணியின் வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்தனார்.

இதில் இந்திய அணி 148 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியில் கேப்டன் தோனி 82 ரன்களும், முரளி விஜய் 18 ரன்களும், அஷ்வின் 13 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கங்களில் விக்கெட்டை இழந்தனர்.  

இங்கிலாந்து வீரர்கள் வோக்ஸ் 3, ஜோர்டன் 3, ஆன்டர்சன் 2, ப்ராட் 2 விக்கெட் எடுத்தனர்.

நாட்டிங்காமில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்சில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில், இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சவுதம்டன் டெஸ்டில் 266 ரன்கள் வித்தியாசத்திலும், மான்செஸ்டர் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.