புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 19 மே 2024 (12:34 IST)

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

MS Dhoni sixer
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில் அதற்கு காரணம் தோனி அடித்த சிக்ஸர்தான் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.



ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது என்றாலும் நேற்றே ப்ளே ஆப் செல்லும் அணிகளின் தகுதி வாய்ப்புகள் முடிவடைந்து விட்டன. நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி ப்ளே ஆப் வாய்ப்புக்கு மிக அருகில் வந்து தோல்வியை தழுவியது. இதனால் ஆர்சிபி வெற்றி பெற்று ப்ளே ஆப் தகுதி பெற்றுள்ளது.

நேற்றைய போட்டியில் சிஎஸ்கே தனது இறுதி ஓவரில் இருந்தபோது 6 பந்துகளில் 17 ரன்கள் அடித்தால் ப்ளே ஆப் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்று இருந்தது. அப்போது யஷ் தயால் பந்து வீச முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி இரண்டாவது பந்தில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் எட்டக்கூடிய இலக்கையும் எட்ட முடியாமல் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இந்நிலையில் சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனி அடித்த அந்த சிக்ஸர்தான் காரணம் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.


இதுபற்றி பேசிய அவர் “இந்த போட்டியில் நடந்த சிறப்பான விஷயம் தோனி மைதானத்தை தாண்டி வெளியே அடித்த அந்த சிக்ஸர்தான். அதன் காரணமாக ஆர்சிபிக்கு புதிய பந்து கிடைத்தது. வெளியே சென்ற ஈரமான பந்தை விட புதிய பந்து வீசுவதற்கு எளிதாக இருந்தது” என கூறியுள்ளார்.

மேலும் “இந்த சிஎஸ்கே போட்டியோடு வெளியேறிவிடுவோம் என்றுதான் இருந்தேன். இதுதான் எனது கடைசி ஆட்டம் என்று எண்ணி எல்லாருக்கும் குட் பை சொல்ல இருந்தேன். ஆனால் இப்போது மேலும் மூன்று போட்டிகள் விளையாட வேண்டியுள்ளது” என்றும் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K