வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2015 (14:17 IST)

தோனி செய்தது சரியா? இந்திய அணி தோல்வியை தழுவியது ஏன்?

நேற்று ஞாயிற்றுக்கிழமை [11-10-15] கான்பூரில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில், இந்திய அணி கேப்டன் தோனியின் செயல்பாடு கேள்விக்குள்ளாகி உள்ளது.
 

 
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் 35 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து, வெறும் 164 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்க அணியின் ஒருநாள் கேப்டன் டி வில்லியர்ஸ் 34 பந்துகளில் 28 ரன்களுடன், டேவிட் மில்லர் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர்
 
டி வில்லியர்ஸ் அதன் பிறகு நிதானமாகி ஆடி அரைச்சதம் கடந்தார். அவர் 54 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். 42 ஆவது ஓவரில் அவர் அரைச்சதம் கடந்தார். 42 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
 

 
அதன் பிறகு எடுத்த விஸ்வரூபத்தை இந்திய பவுலர்களால் கட்டுப்படுத்தவே இயலவில்லை. அவர் அடுத்த 50 ரன்களை எடுக்க 19 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். ஒரு கேப்டனாக அவரது பணியை செம்மையாக செய்து முடித்தார்.
 
ஆனால், இந்திய அணி 35 ஓவர்கள் முடிவில் 194 ரன்கள் எடுத்திருந்தது. 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இருந்தது ரோஹித் சர்மா 94 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆனால், அடுத்த 5 ஓவர்களுக்கு 20 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
 
40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது கேப்டன் தோனி களமிறங்கினார். ரோஹித் சர்மா 108 ரன்கள் எடுத்திருந்தார். ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

ஆனால், தோனி பந்தை எதிர்கொள்ளவே தடுமாறிக் கொண்டிருந்தார். ஆனாலும், 46 ஆவது ஓவர்கள் முடிவில் இந்திய அணி 269 ரன்கள் என்ற நிலையில் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்தது. ரோஹித் சர்மா 150 ரன்களை கடந்து முடித்திருந்தார்.

ஆனால், தோனி 16 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதில் ஒரு பந்து கூட எல்லைக்கோட்டை தொடவில்லை. எதிர்பாராதவிதமாக அடுத்தப் பந்திலேயே ரோஹித் சர்மா அவுட் ஆகி வெளியேறினார். மைதானம் நிசப்தத்தில் ஆழ்ந்தது.
 
இப்போது இந்திய அணிக்கு 23 பந்துகளில் வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவை. தோனி களத்தில் இருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கையை இழக்காமல் இருந்தனர். அடுத்து வந்த ரெய்னா 3 ரன்களில் அதே ஓவரில் வெளியேறினார்.
 

 
இரண்டு பேரையும் சரியான முறையில் பந்துவீசி தந்திரமாக வெளியேற்றினார் இம்ரான் தாஹிர். ஸ்டூவர்ட் பின்னி களமிறங்கினார். இப்போது 3 ஓவர்களுக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. டி 20 ஓவர்களில் இதைவிட இக்கட்டான சூழ்நிலைகளை இந்திய அணியும், வீரரகளும் சிறப்பாக கையாண்டுள்ள வரலாறு உள்ளது.
 
தோனி களத்தில் இருந்ததால் இதெல்லாம் அவருக்கு ஒரு பெரிய விஷயமே கிடையாது என்று ரசிகர்கள் அவரது வழக்கமான ‘ஹெலிகாப்டர்’ அடிக்காக காத்திருந்தனர். ஆனால், 48ஆவது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதுவும் இரண்டும் ஒன்றுமாக ஓடியே எடுத்தனர்.
 
49 ஓவரில் 11 ரன்கள் எடுத்தனர். ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடிக்கப்பட்டது. 25 பந்துகள் சந்தித்த பின் முதல் பவுண்டரியை அப்போதுதான் அடித்தார் தோனி.
 

 
கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இரண்டு அணியினரும் நெருக்கடிக்கு உள்ளானார்கள். ரபாடா பந்து வீச அழைக்கப்பட்டார்.
 
இந்நிலையில் முதல் பந்தில் தோனி 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 33அவது பந்தில் பின்னி ஒரு ரன் எடுத்தார்.
 
4ஆவது பந்தை தோனியின் சிக்ஸருக்காக காத்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், அந்த பந்தில் தோனி அவுட்டானார். இதனால், மைதானத்தில் நிசப்தம் நிலவியது. ஒவ்வொருவரும் கடவுளைதான் வேண்டிக்கொள்ள வேண்டியிருந்தது.
 
கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. 5ஆவது பந்தில் பின்னியும் வெளியேறினார். கடைசி பந்தில் 7 ரன்கள் என்ற நிலையில், ஒரு ரன் மட்டும் எடுக்க 5 ரன்களில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
 
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தோனி 49வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்திருக்கலாம். ரோஹித் வெற்றி வாய்ப்பை எளிதாக்கி விட்டுத்தான் சென்றிருந்தார். ஆனால், அவரால் பந்துகளை லாவகமாக எதிர்கொள்ள முடியவில்லை. அவரிடமும் அதற்கான வேகமும் தெரியவில்லை.

வழக்கம் போல் அஸ்வின் இடையிலேயே பந்துவீச முடியாமல் வெளியேறியதுதான் தோல்விக்கு காரணம் என்றும், பந்துவீச்சாளர்கள் ரன் ரேட்டை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்று பூசி மெழுகிச் சென்றார்.

தோனி தனது செயல்பாடு குறித்து மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பழையை வெற்றிகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. இளைஞர்கள் போர் குணத்தோடு தயாராக இருக்கிறார்கள் என்பதை தோனி கவனிக்க வேண்டும்...