வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 11 அக்டோபர் 2015 (12:52 IST)

டி வில்லியர்ஸ் ’த்ரில்’ சதம்; இந்தியாவிற்கு 304 ரன்கள் இலக்கு

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டி வில்லியர்ஸின் அபார சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 303 ரன்கள் குவித்துள்ளது.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஜோடிகளான குவிண்டன் டி காக் (29), ஹசிம் அம்லா (37) எடுத்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய டு பிளஸ்ஸி 62 ரன்கள் [5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] எடுத்தார். அடுத்த வந்த மில்லர் (13) எடுத்து வெளியேறினார்.
 
அதன் பிறகு டி வில்லியர்ஸ் களமிறங்கினார். பேட்ஸ்மேன்களின் நிதான ஆட்டத்தால் 41 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணி 200 ரன்களை தொட்டது. அப்போது டி வில்லிர்ஸ், 54 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 50 ரன்களை தொட்டார். அதன் பிறகு கதையை மாற்றிப்போட்டார் டி வில்லியர்ஸ்.
 
இதற்கிடையில், டுமினி (15) ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த 5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அணி 50 ரன்கள் எடுத்து 250-ஐ தொட்டது. டி வில்லியர்ஸுக்கு துணையாக பெஹார்டியனும் இந்திய பந்து வீச்சை துவம்சம் செய்தார்.
 
49 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 282 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 98 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆனால், பேட்டிங் முனையில் பெஹார்டியன் இருந்தார். முதல் இரண்டு பந்துகளில் பவுண்டரியையும், மூன்றாவது பந்தில் சிக்ஸரையும் பெஹார்டியான் எடுத்தார்.
 
இதனால், டி வில்லியர்ஸ் சதம் அடிப்பாரா என்ற நிலைமை உருவானது. நான்காவது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்தை எதிர்கொண்ட டி வில்லியர்ஸ் ரன் ஏதும் எடுக்கவில்லை. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் சதத்தை நிறைவு செய்து தென் ஆப்பிரிக்கா அணி 300 ரன்கள் எட்டவும் உதவினார்.
 
முதல் 50 ரன்கள் எடுக்க 54 ரன்கள் எடுத்துக்கொண்ட டி வில்லியர்ஸ், அடுத்த 50 ரன்களை கடக்க 19 ரன்கள் மட்டுமே எடுத்துக்கொண்டார்.