வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. »
  3. கிரிக்கெட்
  4. »
  5. செய்திகள்
Written By Muthukumar
Last Updated : புதன், 2 ஏப்ரல் 2014 (11:58 IST)

3 ஓவர்... மூன்றே ஓவர்... பாகிஸ்தான் அவுட்; மே.இ.தீவுகள் அரையிறுதியில்!

டேரிங் டேரன் சமி, பிரேவ் பிராவோ என்றே இருவரையும் அழைக்கவேண்டும்! ஆம்! எல்லோரும் நடுங்கும் சயீத் அஜ்மலை புரட்டி எடுத்த அந்த ஓவர்தான் பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்தது. நேற்று பாகிஸ்தானை மிகவும் அசத்தலாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
டாஸ் வென்ற டேரன் சாமி முதலில் பேட் செய்ய முடிவெடுத்ததே பலருக்கும் ஆச்சரியம். ஏனெனில் இங்கு துரத்த்ல் சுலபமாகி வருகிறது. அதாவது நல்ல பேட்டிங் அணிகளுக்கு! முதல் 15 ஓவர்களில் 84 ரன்களை மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தது. வெஸ்ட் இண்டீஸ்.
 
16வது ஓவரிலிருந்து துவங்கியது பாகிஸ்தானுக்கு கெடுபிடி. வைன் பிராவோ, டேரன் சமி 2 பவுண்டரிகளை விளாச அந்த ஓவரில் 16 ரன்கள்.

அடுத்த ஓவர் சயீத் அஜ்மல். அவர் 2 ஓவர்கள் வீசி 6 ரன்களையே விட்டுக்கொடுத்திருந்தார். 3வது ஓவர் வீச வந்தார். 3வது பந்தை சமி அடிக்க விக்கெட் கீப்பருக்கு பின்னால் பவுண்டரி சென்றது. வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்களை எட்டியது. பிறகு டீப் மிட்விக்கெட்டில் ஒரு 2, பிறகு கடைசி பந்தை அஜ்மல் வைடாக வீச ஒரே ஒரு பளார் பாயிண்டில் பவுண்டரி 12 ரன்கள் அந்த ஓவரில்.
அடுத்த ஓவர் உமர் குல். முதல் பந்து பிட்ச் ஆனதுதான் தெரியும் லாங் ஆன் திசையில் பந்து இறங்கவேயில்லை. சிக்ஸ்! அடித்தது பிராவோ. அடுத்த பந்து ஷாட் பிட்ச் மிட்விக்கெட்டில் பளார் மீண்டும் சிக்ஸ். பிராவோ அச்சுறுத்தல் தொடங்கியது. பிறகு பாயிண்டில் ஒரு பளார் அது சிக்ஸ் ஆகியிருக்கும் ஆனால் ஒரு பவுன்சில் பவுண்டரி. அந்த ஓவரில் 21 ரன்கள். 18 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 128/5.

அஜ்மல் கடைசி ஓவரை வீச வந்தார். முதல் பந்து சாமி சிங்கிள் எடுக்க, பிராவோ அடுத்த பந்தை மிட்விக்கெட் திசையில் காணாமல் அடித்தார். மீண்டும் பிரஷரில் ஷாட் பிட்ச் வீச அஜ்மலை மறுபடியும் மிட்விக்கெட்டில் சிக்ஸர் தூக்கினார் பிராவோ. பிறகு ஒரு ரன். அதன் பிறகு சாமி வந்தார். நேராக சிக்ஸ். அடித்து விட்டு தன் முஷ்டியை உயர்த்தினார் சாமி. அடுத்த பந்து எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி. அந்த ஓவர் 24 ரன்கள்.
கடைசி ஓவரில் சொகைல் தன்வீர் 14 ரன்களை கொடுக்க வெஸ்ட் இண்டீஸ் கடைசி 5 ஓவர்களில் 82 ரன்கள் அதுவும் கடைசி 3 ஓவர்களில் 59 ரன்கள். வெஸ்ட் இண்டீஸ் 166/6. டேரன் சாமி 20 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 42. பிராவோ 26 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 46. ரண களம் முடிந்தது.
 
அஜ்மல் கடைசி இரண்டு ஓவர்களில் 36 ரன்களை விட்டுக் கொடுத்து மொத்தம் 42 ரன்கள் கொடுத்தார்.

இலக்கைத் துரத்த பாகிஸ்தான் களமிறங்கியது. அகமட் ஷேஜாதின் துவக்கத்தை நம்பியிருந்த பாகிஸ்தானுக்கு முதல் பந்தே அதிர்ச்சி காத்திருந்தது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் சந்தோகி முதல் பந்தையே ஒரு அக்ரம் பந்தாக வீச, செம யார்க்கர் ஷேஜாதின் ஷூ முனையில் பட நடுவர் கையைத் தூக்கினார்.
அதன் பிறகு பாகிஸ்தானுக்கு வெறும் பதட்டம் பதட்டம் மட்டுமே! அதன் பிறகு மோசமான ஷாட்கள் பல. முதலில் கம்ரன் அக்மல் பத்ரீ பந்தை எக்ஸ்ட்ரா கவரில் கட்டுப்படுத்தாமல் ஆட கேட்ச் ஆனது. வைன் பிராவோ ஒரு அருமையான டான்ஸ் ஆடினார்.
 
அதன் பிறகு ரன்கள் வரவேயில்லை. பாகிஸ்தான் பேட்ஸ்மென்களுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை இடையே 2 முறை பதட்டத்தில் ரன் அவுட்கள் வேறு நடந்திருக்கும் மொகமது ஹபீஸை இழுத்து விட்டார் உமர் அக்மல். 
 
இதே பதட்டத்தில் தான் உமர் அக்மல் சாமுயேல் பத்ரி பந்தை மேலேறி வந்து அசிங்கமாக ஸ்டம்ப்டு ஆனார்.
 
மீண்டும் ஷோயப் மாலிக், இவரும் பத்ரியை மேலேறி வந்து அடிக்க முயல பந்து மிஸ் ஆனது ஸ்டம்ப்டு ஆனார். பாகிஸ்தான் 6 ஓவர்களில் 13/4 என்று ஆனது. பிறகு மக்சூத் ஒரு சிக்ஸ் அடித்தார். இதுதான் முதல் பவுண்டரி. அதன் பிறகும் ரன்கள் வரவில்லை. 10 ஓவர்களில் 35/4 என்ற நிலையில் பொறுத்துப்பார்த்த ஹபீஸ் பொங்கி எழுந்து ரசல் பந்தில் கெய்ல் டான்ஸிற்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
 
சுனில் நரைன் வந்தார் மக்சூத் ஒரு பவுண்டரி அடித்து 18 ரன்கள் எடுத்த நிலையில் ராம்தினின் 4வது ஸ்டம்பிங்காக வெளியேறினார். அதன் பிறகு அப்ரீடி 18 ரன்கள். ஹபீஸ் அதிகபட்சமாக 18 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் 17.5 ஓவரில் 82 ஆல் அவுட்.
 
பத்ரீ 3 விக்கெட், நரைன் 3 விக்கெட், சன்டோகி 2 விக்கெட். ஆட்ட நாயகன் வைன் பிராவோ.