நான் வந்தாலே போதும்… ரன் அடிக்க வேண்டாம் – கெய்ல் பேச்சு!
டி 20 கிரிக்கெட்டின் யூனிவர்சல் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் 14000 ரன்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் எல்லாருமே டி 20 கிரிக்கெட் விளையாடுவதில் மிகுந்த ஆர்வமும் சாதனைகளையும் படைத்து வருகின்றனர். அந்த வகையில் கிறிஸ் கெய்ல், தனிநபராக டி 20 போட்டிகளில் மட்டும் 1000 சிக்ஸர்கள் அடித்துள்ளார். தற்போது 41 வயதாகும் கிறிஸ் கெய்ல் இன்னமும் இளம் வீரர் போல் விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 67 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். மேலும் ஒரு சாதனையாக டி 20 கிரிக்கெட் போட்டியில் 14000 ரன்கள் என்ற சாதனையை இதன் மூலம் நிகழ்த்தியுள்ளார்.
அந்த போட்டிக்குப் பின்னர் அவர் அளித்த நேர்காணலில் தொடரை வென்றது மகிழ்ச்சி. பொலார்ட் விளையாடாவிட்டாலும், வெற்றிக்கு மிகப்பெரிய பங்காற்றி வருகிறார். என்னுடைய குறிக்கோள் டி20 உலகக் கோப்பைதான். என் இலக்கு டி 20 உலகக்கோப்பைதான். நான் ரன்கள் அடிப்பதில்லை என்று வர்ணனையாளர்கள் புள்ளி விவரங்களை அடுக்குகிறார்கள். ஆனால் நான் களத்துக்குள் வந்தாலே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள், உற்சாகமாகிறார்கள். யுனிவர்ஸ் பாஸ்' என்ற வார்த்தைக்கு மதிப்பு கொடுங்கள். கிரிக்கெட் விளையாடுவோம், மகிழ்ச்சியாக இருப்போம். எனக் கூறியுள்ளார்.