1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Updated : ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (13:27 IST)

இந்தியா படுதோல்வி: மூன்றே நாளில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி!

இந்தியா படுதோல்வி: மூன்றே நாளில் முடிந்த முதல் டெஸ்ட் போட்டி!

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே புனேவில் நடைபெற்று வந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் படுதோல்வியடைந்துள்ளது.


 
 
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 260 ரன்களில் ஆட்டமிழந்த ஆஸ்திரேலியா அணி இந்தியாவை 105 ரன்களில் சுருட்டி பந்தாடியது.
 
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி 165 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாவது நாளான இன்று ஆஸ்திரேலியா மேற்கொண்டு 285 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 441 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
 
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக 109 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 441 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது.
 
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வெளிப்படுத்திய மோசமான ஆட்டத்தையே இந்த இன்னிங்ஸிலும் வெளிப்படுத்தியது. எந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று ஆஸ்திரேலிய அணிக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. அதிகபட்சமாக புஜாரா 31 ரன்கள் அடித்தார். ரஹானே 18 ரன்கள், கேப்டன் கோலி 13 ரன்கள், ராகுல் 10 ரன்கள் குவித்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர்.
 
இறுதியில் இந்திய அணி 107 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலிய அணியிடம் படு தோல்வியடைந்து வரலாற்றின் மோசமான தோல்வியொன்றை பதிவு செய்தது. இந்த போட்டு மூன்ற நாட்களில் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் வீழ்த்திய ஸ்டேவ் ஒ’கெஃபெ இந்த இன்னிங்ஸிலும் 6 விக்கெட் வீழ்த்தினார். மற்றொரு வீரர் லயான் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.