வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 30 ஜூலை 2015 (19:21 IST)

ஆஸ்திரேலியா ஏ அணி 194 ரன்கள் முன்னிலை; 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் அபாராஜித்

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா ஏ அணி 9 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் பந்துவீச்சாளர் அபாராஜித் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான 2ஆவது பயிற்சி ஆட்டம் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 

 
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் மைதானத்திற்கு வருவதும், கேலரிக்கு திருமபுவதுமாக அணிவகுப்பை நடத்தினர். தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் 15 ரன்களும், சதீஸ்வர் புஜாரா 11 ரன்களும், விராட் கோலி 11 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 1 ரன்னும், நமன் ஓஜா 10 ரன்களும், பாபா அபாராஜித் 12 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
 
அடுத்து வந்த 4 வீரர்களும் ஒற்றை இலக்கத்தைக் கூட தாண்டாமல் அவுட் ஆகி வெளியேறினார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன்களுக்குள் சுருண்டது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக கருண் நாயர் மட்டும் 50 ரன்கள் எடுத்திருந்தார்.

கேமரூன் பான்கிராஃப்ட் அபாரம்:
 
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா 33 ரன்களும், ஜோ பர்ன்ஸ் 8 ரன்களும், ஹாண்ட்ஸ்காம்ப் ரன் ஏதும் இல்லாமலும், ஸ்டோய்னிஸ் 10 ரன்களும், மேத்யூவ் வேட் 11 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
 
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பான்கிராஃப்ட் நிலைத்து நின்று ஆடி 150 [16 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக ஃபெர்குசன் 54 ரன்களும் குவித்து அணியை தூக்கி நிறுத்தினர்.
 

 

அபாரஜித் அசத்தல்:
 
இதனால், ஆஸ்திரேலியா ஏ அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அபாராஜித் 5 விக்கெட்டுகளையும், ப்ரக்யன் ஓஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.